திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிரி பிரகாரம் மண்டபம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: இருவர் படுகாயம்

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      தூத்துக்குடி
thiruchenthur murugan temple fall in mandapam

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கதேர் உலா வரக்கூடிய கிரி பிரகாரம் மண்டபத்தில் 50 அடி நீளத்திற்கு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளிடையே சிக்கிய மோர் விற்கும் பெண் நசிங்கி பலியானார். திருப்பூர் பக்தர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கோயில் நடை உடனடியாக சாத்தப்பட்டது

சம்பவ இடத்தை பார்வையிட்ட கலெக்டர் வெங்கடேஷ், கிரி பிரகாரம் மற்றும் கட்டிடங்களை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை இன்ஜினியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே பலியானவர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண கேட்டு அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயில் கடலருகே அமைந்து சிறப்பு வாய்ந்தது. இயற்கை எழிலுடன் கோயில் கிரிபிரகாரத்துடன் பார்ப்பதற்கே ஆச்சரியமூட்டும் வகையில் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க தேரில் உலா வரக்கூடிய கிரி பிரகாரம் மண்டபம் தூண்களால் தாங்கி நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரி பிரகாரத்தின் வள்ளி குகை எதிர்புறம் வடக்கு பிரகாரம், தெற்கு பிரகாரம் திரும்பும்  இடத்தில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை சுமார் 50 அடி நீளத்திற்கு நேற்றுகாலை 10.30 மணியளவில் திடீரென எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர், போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இச்சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இடிந்த விழுந்த இடத்தில் மேற்கூரை கனமான கட்டிடங்களாக இருந்ததால் உடனடியாக ஜே.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இரண்டு ஜே.சி.பி. மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டன. அப்போது இடிபாடுகளிடையே சிக்கி திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆதிநாராயணன் மனைவி பேச்சியம்மாள்(44) நசிங்கி இறந்தது தெரியவந்தது. இவர் இந்த பகுதியில் உட்கார்ந்து மோர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும் சம்பவ இடத்தில் கட்டிடம் விழுந்த போது காயமடைந்த திருச்செந்தூர் சுப்பிரமணியரபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் செந்தில் ஆறுமுகம்(64), சுவாமி தரிசனத்திற்காக வந்த திருப்பூர் பெருமாள்நல்லூரைச் சேர்ந்த முத்துசாமி மகன் கந்தசாமி(74) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் செந்தில்ஆறுமுகம் சம்பவ இடத்தில் சுக்கு காபி வியாபாரத்தில் ஈடுப்பட்டு வந்தார். கந்தசாமி முன்னாள் வி.ஏ.ஒ.,வாக பணியாற்றியவவர். மேலும் சம்பவ இடத்தில் இடிந்த கட்டிடங்கள் உடனடியாக சுமார் ஒரு ஒன்றரை மணி நேரத்தில் அகற்றப்பட்டன. மேலும் சம்பவ இடத்திற்கு பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த உடனே கோயில் நடைசாத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், எஸ்.பி. மகேந்திரன், திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., கணேஷ்குமார், தாசில்தார் அழகர், போலீஸ் டி.எஸ்.பி. பாலசந்திரன்(பொறுப்பு), கோயில் இன்ஸ்பெக்டர் ஷீஜராணி, தாலுகா இன்ஸ்பெக்டர் ரகுராஜன், கோயில் உதவி ஆணையர் ராமசாமி, கோயில் அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன், உள்துறை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மனோரஞ்சிதம் ஆகியோர் விரைந்து மீட்பு பணிகளை பார்வையிட்டனர். இடிபாடுகளில் சிக்கி இறந்த பேச்சியம்மாளுக்கு சுமதி(14) மகளும், சுரேஷ்(12) மகனும் உள்ளனர். இவர்கள் 9ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பு படித்து வருகின்கின்றனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர் கலெக்டர் வெங்கடேஷ் கூறியதாவது:

திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரத்தில் வடக்குவாசல் அருகே மேற்கூரை சுமார் 20 மீட்டர் அளவிற்கு இடிந்து விழுந்தது. இதில் பேச்சிம்மாள் இடிபாடுகளிடையே சிக்கி இறந்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் செந்தில் ஆறுமுகம்(64), திருப்பூரைச் சேர்ந்த பக்தர் கந்தசாமி(74) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கோயில் பகுதியில் உள்ள 40 முதல் 45 ஆண்டுகள் வரையிலான பழமையான கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப்பணித்துறையினர் சூப்பிரெண்டென்ட் இன்ஜினியர் தலைமையில், வருவாய் துறை, போலீஸ், அறநிலையத்துறை, டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் 5 பேர் அடங்கிய குழுவினர் கட்டிடங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இவர்கள் உடனடியாக ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே இறந்த போன பேச்சியம்மாளின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு மெயின்ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கலெக்டரோ, அறநிலையதுறை அதிகாரிகளோ நேரில் சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை. பாதிக்கப்பட்ட பேச்சியம்மாள் குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ.50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர். மறியல் நடத்தியவர்களிடம் திருச்செந்தூர் ஆர்.டி.ஒ. கணேஷ்குமார், தாசில்தார் அழகர், டி.எஸ்.பி.பாலசந்திரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் 12.45 மணி முதல் 1.15 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அரசு தெரிவித்து நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் குவிந்தனர்.  

கிரிபிரகாரம் வரலாறு

மேற்கூரை இடிந்த விழுந்த கிரி பிரகாரம் 1760 அடி நீளம் கொண்டது. கடந்த 1971ம் ஆண்டு சாண்டோ சின்னப்ப தேவர் உபயமாக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட பணி துவங்கியது. இப்பணி 1974ல் நிறைவடைந்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த கிரி பிரகாரம் கடந்த 2009ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. அப்போது மேற்கூரையி சேதமடைந்த பகுதிகளை மட்டுமே சீரமைக்கப்பட்டது. கிரி பிரகாரத்தின் பலம், தன்மை குறித்து இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து