மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனங்களுக்கு தண்ணீர் கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்

புதன்கிழமை, 20 டிசம்பர் 2017      திருநெல்வேலி
nellai collectorr 20 12 2017

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பிராதானக் கால்வாய் 1, 2, 3 மற்றும் 4வது பிரிவு பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. தமிழக முதலமைச்சர்  உத்தரவின்படி, கலெக்டர் சந்தீப் நந்தூரி,  தண்ணீரினை திறந்து வைத்தார்.பின்னர், கலெக்டர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-

தண்ணீர் திறப்பு

 தமிழக முதலமைச்சர்  உத்தரவின்படி, மணிமுத்தாறு அணையில் 1 முதல் 4 வது பிரிவு வரை உள்ள கால்வாய்களில் பிசான பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று, 445 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 31.03.2018 வரை நீர் இருப்பினை கருத்தில் கொண்டு பிரதானக் கால்வாய் 1வது மற்றும் 2வது ரீச்சுகளின் கீழ் உள்ள 10834 ஏக்கர் மறைமுக பாசன பரப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை அளவு நீர்வரத்து மற்றும் நீர் இருப்பினை பொறுத்து 3வது, 4வது ரீச்சுகளின் கீழ் உள்ள 12018 ஏக்கர் மறைமுக பாசன பரப்புகளுக்கும் சேர்த்து ஆக மொத்தம் 22852 ஏக்கர் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, இராதாபுரம் வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களில் உள்ள பாசன குளங்கள் பயன்பெறும். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து அணைகளிலும் இவ்வாண்டு நீர் இருப்பு நல்ல நிலையில் உள்ளது. பாசனத்திற்காக அனைத்து அணைகளிலும் நீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமென பேசினார்.இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை தாமிரபரணி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் சுப்பிரமணியன், அம்பாசமுத்திரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பார்கவி தங்கம் உதவி செயற்பொறியாளர்கள் சிவகுமார், பழனிவேல், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், மகேஸ்வரன், அரவிந்த்குமார், இளநிலை பொறியாளர் மாரியப்பன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து