உலக நன்மைக்காக தி.மலை கிரிவலப் பாதையிலுள்ள நந்திபெருமான் கோவிலில் கடலூர் வலைவாணர சிவநெறி சிவனடியார்கள் திருக்கூடம் சார்பில் நேற்று 63 நாயன்மார்களுக்கு மகாஅபிஷேகம் நடந்தது. இதையட்டி பக்தர்கள் மற்றும் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மகாஅபிஷேகம்
திருவண்ணாமலை கிரிவலப் பாதை நித்யானந்தா ஆசிரமம் எதிரே அமைந்துள்ள நந்தி பெருமான் கோவிலில் நேற்று கடலூர் வலைவாணர் சிவநெறி சிவனடியார் திருக்கூடம் சார்பில் மார்கழி மாதத்தையட்டி சமய குரலின் ஒருவராகிய மணிவாசக பெருந்தகை விழாவையட்டி உலக நன்மைக்காகவும் மக்கள் நன்மைக்காகவும் 63 நாயன்மார்களுக்கு 51 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாபிஷேகம், தீபாரானை நடந்தது. இதில் சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், விருதாச்சலம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சிவனடியார் பெருமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை திருநேர் அண்ணாமலை கோவிலிலிருந்து அடிஅண்ணாமலை அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத அருள்மிகு ஆதி அருணாசலேஸ்வரர் கோவில் வரை கைலாய வாத்யம் முழங்க அடியார்பெருமக்கள் புடைசூழ அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் 63 நாயன்மார்கள் வீதியுலா சென்றடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கடலூர் வலைவாணர் சிவநெறி சிவனடியார் திருக்கூடம் சார்பில் பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணியளவில் அடிஅண்ணாமலை அருள்மிகு ஆதிஅருணாசலேஸ்வரர் கோவிலில் திருவாசக தேன்பருகு விழா நடைபெறவுள்ளது. இது தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கவுள்ளனர்.