லால்குடி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் : கலெக்டர் கு.ராசாமணி.உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      திருச்சி
pro try

திருச்சி மாவட்டம், லால்குடி பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என கலெக்டர் கு.ராசாமணி உத்தரவிட்டார்.

ஆக்கிரமிப்பு

லால்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நில உடமை மேம்பாடு திட்டத்தில் ஏற்பட்ட தவறுகள் திருத்தம் மற்றும் கனிணி பட்டாவில் பெயர் விடுபடுதல் தொடர்பான சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி.தலைமையில் நேற்று நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து 364 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் 30 நாட்களுக்குள் மனுக்கள் மீது தீர்வுகான உத்தரவிட்டார்.

உத்தரவு

இம்மனுக்கள் விசாரனை முன்னேற்றம் தொடர்பான அறிக்கைகளை வாரம்வாரம் மாவட்ட கலெக்டர் , மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோருக்கு வட்டாட்சியர்கள் தொடர்ந்து அனுப்பி வைக்க வேண்டும். 30 நாட்களுக்கு பிறகு மீண்டும் இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகின்ற போது நில உடமை மேம்பாட்டு திட்டத்தில் மனுக்கள் வழங்கிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதற்கான உத்தரவுகளை வழங்கிட வேண்டும். இது போன்ற முகாம்கள் மூலம் கிடைக்கின்ற தீர்வுகள் விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். தமிழ்நாட்டில் முதன்முதலாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தான் இப்புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 4 கோட்டங்களிலும் விவசாயிகள் வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்து இம்முகாம் நடத்தப்படும். இவ்வாய்ப்பை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

தொடர்ந்து இலால்குடி பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் , பேருந்து நிலையம் முழுவதும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றும், வந்து செல்லக் கூடிய பேருந்துகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இரு சக்கர வாகனங்களை, வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும். ஆக்கிரமித்துள்ள தற்காலிக கடைகளை அப்புறப்படுத்தி அவர்களுக்கென்று தனி இடம் ஒதுக்குவதற்கும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் நாளொன்றுக்கு இரு முறை சுத்தம் செய்யப்பட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பஷீர், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு, உதவி இயக்குநர் (நில அளவை) சேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) சௌந்திரராஜன் , வட்டாட்சியர் ராகவன், பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து