நெல்லையில் பள்ளி, கல்வித் துறையின் சார்பில் கலைத் திருவிழா அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி பங்கேற்பு

வியாழக்கிழமை, 25 ஜனவரி 2018      திருநெல்வேலி
minister rajalakshmi issue prizes for cultural festival

திருநெல்வேலி, பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி, கல்வித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான தமிழக பள்ளி கலைத் திருவிழா (கலையருவி) விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி,  தலைமையில்  நடைபெற்றது. இவ்விழாவில்,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி  கலந்து கொண்டு, கலை திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 584 மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களையும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் 84 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களையும் வழங்கினார்.விழாவில்,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்  பேசியதாவது-

தமிழக பள்ளி கலைத் திருவிழா

தமிழக மாணவ செல்வங்களை  புரட்சித்தலைவி அம்மா  தன் பிள்ளைகளை போல பாவித்து, மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில வேண்டும். கல்வியை பாதியில் நிறுத்தக் கூடாது. உலகளவில் நமது மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக 14 வகையான உதவிகளை மாணவ, மாணவிகளுக்கென செயல்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து நமது  முதல்வர் ,  துணை முதல்வர் ,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களை கல்வியில் சிறந்தவர்களாகவும், மதிப்புமிக்கவர்களாகவும் மாற்றிட ஆசிரியர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். அத்துடன் அவர்களின் கலை திறனையும் வளர்க்க முடியும் என்பதை இங்கு நடந்த கலை நிகழ்ச்சிகள் மூலம் தெரிவித்துள்ளார்கள். ஒவ்வொரு மாணவரின் திறமைகளையும் ஆசிரியர்கள் வெளிகொணர்ந்து நிறைய போட்டிகளில் பங்கேற்று அதிக பரிசுகளை பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிகளில் பங்கேற்ற அனைவரும் இதை வெற்றியின் முதல் படியாக மனதில் நிறுத்தி, அடுத்து வரும் ஆண்டுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும். இளைஞர்களை செல்போன், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட கவனத்தினை சிதைக்கும் பல விஷயங்களில் இருந்து அவர்களை இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதன் மூலம் ஊக்கப்படுத்தலாம். இதை நிருபிக்கும் வகையில் இங்கு சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை செய்த மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாளைய உலகை ஆளும் அடுத்த தலைமுறை ஆகிய நீங்கள் சிறப்பாக கல்வி பயில்வதுடன், கலைகளிலும் திறமையினை வளர்த்து தாய், தந்தை, ஆசிரியர் மற்றும் பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு பெருமை ஏற்படுத்திட வேண்டும். நமது மாவட்ட மாணவ, மாணவிகள் அதிகளவில் மாநில அளவில் பங்கேற்று வெற்றி பெற்று,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பரிசு பெற்று, நமது மாவட்டம் தமிழகத்தில் முதல் மாவட்டமாக திகழ்ந்திட வேண்டுமென பேசினார்.இவ்விழாவில், கலெக்டர் சந்தீப் நந்தூரி,  பேசியதாவது-

தமிழக அரசு நமது கலாச்சாரம் மற்றும் தொன்மையான கலைகளை வெளிப்படுத்தும் வகையில் கலைப் போட்டிகளை பள்ளி அளவில் நடத்தி வருகிறது. 2017-18ம் கல்வி ஆண்டில் நமது மாவட்டத்தில் கலைப் போட்டிகள் நடுநிலைப்பள்ளி அளவில் 25 பிரிவிலான போட்டிகளும், உயர்நிலைப் பள்ளி அளவில் 103 போட்டிகளும், மேல்நிலைப்பள்ளி அளவில் 103 போட்டிகளும் என மொத்தம் 231 வகையிலான போட்டிகள் நடத்தப்பட்டு, 584 மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. நுண்கலை, இசை, கருவி இசை, நடனம், நாடகம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. நமது கலாச்சாரத்தினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நீங்கள் அதற்கான பயிற்சிகளை பெற்றுள்ளீர்கள்.  இங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்திய பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு திறன்மிக்க கலைஞர்களை போல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளீர்கள். இது மிகவும் பெருமைக்குரியதாகும். மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ள நீங்கள் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென பேசினார்.முன்னதாக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த 84 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ரூ.4.32 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி  வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.எஸ்.இன்பதுரை, எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ச.முருகானந்தம், டான்பெட் துணைத் தலைவர் கண்ணன்(எ) ராஜூ, ஆவின் சேர்மன் ரமேஷ், அக்ரோ சேர்மன் மகபூப்ஜான், நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆறுமுகம், முக்கிய பிரமுகர்கள் சுதா கே.பரமசிவம், பரணி சங்கரலிங்கம், ஜெரால்டு, தச்சை மாதவன், கபேரியல் ராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் (திருநெல்வேலி) இரா.ஜெயபாண்டி, (தென்காசி) சி.ரதிபாய், திருநெல்வேலி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பொ.சந்திரசேகரன், திருநெல்வேலி மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ப.நடராஜன், அனைவருக்கும் கல்வி திட்ட உதவி திட்ட அலுவலர் சி. சேது சொக்கலிங்கம், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் த.தனசிங் ஐசக் மோசஸ், சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி த.ஞானஜோதி, பள்ளி தலைமையாசிரியை ந.நூர்ஜிபாய்எபனேசர் உள்பட அலுவலர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து