அரியலூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் : கலெக்டர் க.லட்சுமி பிரியா, தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 25 ஜனவரி 2018      அரியலூர்
pro Ariyalur

 

அரியலூரில் தேசிய வாக்காளர் தினவிழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா தலைமையில் நேற்று (25.01.2018) நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து, வாக்களராகப் பதிவு செய்யவும், வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் இரண்டு சக்கர வாகனப் பேரணியை மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா துவக்கிவைத்தார்கள். மாற்றுத்திறனாளிகள் சைக்கிள் பேரணி, மாவட்ட கலெக்டர் வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதி வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

இதனைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் தலைமையில், அனைத்து அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

பேச்சுப்போட்டி

பின்னர், மாலை 03.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப்பொருட்களும், மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கிடையே நடைபெற்ற கோலப்போட்டியில் சிறந்த கோலத்திற்கான பரிசு சான்றிதழ்களையும், மாவட்ட அளவில் தேசிய வினாடி-வினா 2018-ல் கலந்துகொண்ட 61 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும், புதியதாக பதிவு செய்த 25 வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டைகளையும் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) ஜெ.பாலாஜி, அரியலூர் கோட்டாட்சியர் மு.மோகனராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) ஜே.சுரேஷ்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி, திட்ட அலுவலர் (மகளிர்திட்டம்) .லலிதா, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரவி, அரியலூர் வட்டாட்சியர் சு.முத்துலெட்சுமி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து