முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டபம் அருகே இடையர்வலசையில் பங்குனி உத்திர திருவிழா

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

மண்டபம்,- ராமநாதபரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள இடையர்வலசையில் முருகன்கோவில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
      ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள இடையர்வலசையில் ஏழு கிராமங்களுக்கு பாத்தியமான ஸ்ரீ சக்தி வடிவேல் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 21-ம் தேதி கொடி எற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், 400-க்கும்  மேற்ப்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி நேர்த்தி கடனை தொடங்கினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பங்குனி உத்திர விழா பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் பக்திபரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி பங்குனி உத்திரத்தன்று சக்தி வடிவேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகநாதர் ஆலயத்திலிருந்து சக்தி வடிவேல் முருகன் ஆலயத்திற்க்கு பால்குடம், இளநீர் காவடி, பறவை காவடி, மயில் காவடி, சர்ப்ப காவடி, தேர் இழுத்தல் மற்றும் அலகு குத்தல் என பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் நிறைவாக கோவில் முன்பு பூக்குழி இறங்குவற்கு பிரமாண்டமான அளவில் பூவளர்க்கபட்டது. அதிகாலை 4.30 மணிக்கு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சிறியவர்கள் முதல்பெரியவர்கள் வரை பூ இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பெண் பக்தர்கள் பூ இறங்க அனுமதி இல்லாத காரணத்தால் பெண் பக்தர்கள் பூ குளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்பு 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
     விழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கூறியதாவது:- இந்த கோவிலுக்கு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் காப்பு கட்டி பூக்குளி இறங்கி வருகின்றேன். ஏனெனில் இந்த கோவிலில் நாம் மனதில் வேண்டியது நிறைவேறுகிறது. அதனால் வருடா வருடம் காப்பு கட்டி வருகிறேன் மேலும் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்திற்கு புதிதாக காப்பு கட்டும் பக்தர்களின் எண்ணிக்கை கூடி கொண்டு வருகிறது என்று கூறினர். 31-ம் தேதி இரவு இடுப்பன் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றதுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ம.ஆதிமூலம், ஆலய நிர்வாகசபை தலைவர் தவசி முனியாண்டி, செயலாளர் சுரேஷ் கந்தன், பொருளாளர் நாகசாமி, மற்றும் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். விழாவையொட்டி மண்டபம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாயசேகர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து