முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும், பள்ளிகளில் சேர்க்க காலியாக உள்ள இடங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை குறித்து அனுப்பி உள்ள உத்தரவில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்குக் குறைந்த பட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதன்படி உள்ள 1 லட்சத்திற்கு மேற்பட்ட இடங்களில் மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையில், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு 2018&19 ம் கல்வி ஆண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைமுறைகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

1 கி.மீ தூரம் வரை
இந்தச் சட்டத்தின் படி எல்.கே.ஜி. அல்லது 1 ம் வகுப்பிற்கு அருகாமையிடம் என்பது 1 கிலோ மீட்டர் ஆகும். இதில் 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான காலியிடங்கள் இருந்தால் அருகாமை இடங்கள் என்பதற்கான வரையறை அருகில் உள்ள குடியிருப்புகள் வரை நீடிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் தங்களின் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள்   www.dge.õn.gov.in ßhõõp://www.dge.õn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பெற்றோர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வள மைய அலுவலகங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் ...
குழந்தைளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (ஏப்ரல் 20 ந் தேதி) இன்று முதல் மே 18 ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யத் தேவையான இணையதள வசதி, கம்ப்யூட்டர், ஸ்கேனர் வசதி, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற வசதிகள் கல்வி அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை, மாற்றுத் திறனாளிகள் போன்றோரிடம் இருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கிட வேண்டும்.

குலுக்கல் முறை
மாணவர்கள் சேர்க்கைக்கான குலுக்கல் நடைபெறும் போது கல்வித்துறை அல்லது வருவாய்த்துறை அலுவலர் முன்னிலையில் நடைபெற வேண்டும். மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டப்பின்னர் அதன் பட்டியலில் ஆய்வு அலுவலர், தலைமை ஆசிரியர், குறைந்தது 2 பெற்றோர்கள் கையொப்பம் இட வேண்டும்.

இந்தத் திட்டத்தில் படிப்பதற்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு மே 29 ந் தேதி சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். இவர்களிடம் இருந்து கல்விக் கட்டணம் ஏதும் பெறக்கூடாது.

இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் இன்று முதல் மே 18 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களில் தகுதியானவர், தகுதியற்றவர் விபரம் மற்றும் நிராகரிக்கப்பட்டதற்கான விபரத்தைத் தகவல் பலகையில் மே 21 ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத இடங்களுக்குக் கூடுதலாக இருந்தால் மே 23 ந் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மற்றும் ஒவ்வொரு பிரிவிற்கும் 5 இடங்கள் கொண்ட காத்திருப்பு பட்டியல் ஆகிய விவரங்கள் 24 ந் தேதி பள்ளியின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். மாணவர்கள் சேர்க்கப்பட்ட விபரத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு மே 29 ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து