முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் போலி முத்திரைத் தாள்களை ஒழிக்க மின்னணு ஸ்டாம்ப் முறை அறிமுகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: போலி முத்திரைத் தாள்களை ஒழிக்க, மின்னணு ஸ்டாம்ப் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், நீதிமன்றங்களில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி அவற்றின் செயல்பாட்டை விரைவுபடுத்தவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு உரிய பயன்கள் விரைவாக சென்றடையவும் அரசு வழிவகுத்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

ஆன்லைனில் செலுத்தும்...
தமிழகத்தில் வழக்கு தொடர்வதற்கான கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் இ-ஸ்டாம்பிங் முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து இ-ஸ்டாபிங் முறையில் கட்டணத்தை செலுத்தும் கவுன்டர்களை திறந்துவைத்து முதல் 5 பேருக்கான ரசீதை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

மின்னணு ஆளுமை 
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நீதித்துறையில் மின்னணு ஆளுமை முறைகளை புகுத்துவதன் அவசியத்தையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டும், இத்துறையில் முழுமையாக மின்னணு ஆளுமை முறைகளைக் கொண்டு வர ஏதுவாக, நீதிமன்றங்களில் நீதிசார்ந்த மின்னணு முத்திரைத்தாள் முறையினை புகுத்திட உயர்நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசால் நேற்று முதல் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  

பெருமகிழ்ச்சி...
போலி முத்திரைத்தாள்களை ஒழிக்கவும், முத்திரைத்தாள்கள் பயன்பாட்டில் பாதுகாப்பினை அதிகரிக்கவும் தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.  பதிவுத்துறையில் சென்னை மண்டலத்தில் பயன்பாட்டில் உள்ள மின்னணு நீதிசாரா முத்திரைத்தாள் முறையை, அம்மாவின் அரசு, தமிழகம்  முழுவதும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  மேலும் நீதித்துறையில் பயன்படுத்தப்படும் நீதிசார்ந்த முத்திரைத்தாள்கள் பயன்பாட்டிலும் பாதுகாப்பான இம்முறையை கொண்டுவருவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இணையம் மூலம்...
இத்திட்டத்தை செயல்படுத்த, திருவாளர்கள் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்நிறுவனம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்திலும், டெல்லி, சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் மாநில உயர்நீதிமன்றங்களிலும் இம்முறையை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. இந்த நீதிசார்ந்த மின்னணு முத்திரையை பொதுமக்கள் தாங்களாகவே இணையம் மூலம் உருவாக்கி பயன்படுத்தலாம்.  கணினி மற்றும் இணைய இணைப்பு இல்லாதவர்கள் மேற்கண்ட நிறுவனத்தால் அமைக்கப்பட்ட மையங்களில் அல்லது நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொகையினை செலுத்தி, நீதிசார்ந்த மின்னணு முத்திரைகளை பெற்றுக் கொள்ளலாம்.

விரைவில் அனைத்து....
இம்முறை, முதற்கட்டமாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும், அடுத்த கட்டமாக அனைத்து முதன்மை மாவட்ட நீதிமன்றங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.  தமிழ்நாடு அரசால் இயக்கப்படும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் இம்முறையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நீதிசார்ந்த மின்னணு முத்திரைத்தாள்களில் தனிப்பட்ட இரசீது எண்  அச்சிடப்பட்டிருக்கும்.  நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் பிரிவில் இந்த முத்திரைத்தாளை ஒப்படைத்தால், அதன் உண்மைத் தன்மையை சரிபார்ப்பது மட்டுமின்றி, அதனை மீளவும் தவறான முறையில் பயன்படுத்தா வண்ணம் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  மேற்கண்டவாறு நீதிமன்றங்களில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி அவற்றின் செயல்பாட்டை விரைவுபடுத்தவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு உரிய பயன்கள் விரைவாக சென்றடையவும் தமிழ்நாடு அரசு ஆவன செய்துள்ளது. இதுமட்டுமன்றி, எண்ணில்லா நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு நீதித்துறைக்கு வழங்கியுள்ளது.

பணியிடங்கள்...
வழக்குரைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பணியில் இருக்கும்போதே இறக்கும் வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து, 7 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 4  கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாக உயர்த்தியும் அரசால் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ஏதுவாக கடந்த ஓராண்டில் பல்வேறு பதவிகளுக்கு 1,188 பணியிடங்கள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.

ரூ.1 கோடியே 45 லட்சம்...
நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வண்ணம், மாநிலத்தின்  பல்வேறு இடங்களில்,  கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக 149 நீதிமன்றங்களை உருவாக்க அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.  மேலும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுதல், நீதிமன்றக் கட்டடங்களை பழுது பார்த்தல், இதர உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்காக 92 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரிய மின்சக்திக்கான உபகரணங்களை நிறுவுவதற்கு 1 கோடியே 42 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பாரம்பரிய கட்டிடத்தின் 125ஆம் ஆண்டு விழாவினை கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசால் ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. நிலுவை வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர 149 நீதிமன்றம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நீதித்துறைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

8-வது மாநிலம்
இ-ஸ்டாம்பிங் திட்டத்தை அறிமுகப்படுத்தும் 8-வது மாநிலம், தமிழகம் ஆகும். இதன் மூலம் வழக்குக்கான கட்டணத்தை மின்னணு முறையில் பொதுமக்கள் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை வழக்கு தொடர்வதற்கான கட்டணம், ஸ்டாம்ப், பத்திரம் மூலமாகவே பெறப்பட்டு வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து