முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு புதிய ஜெர்சி

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      விளையாட்டு
India 2023-11-24

Source: provided

20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த மாதம் 30-ம் தேதி அறிவிக்கப்பட்டது. 

கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விக்கெட் கீப்பர்களாக நல்ல பார்மில் உள்ள ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பி.சி.சி.ஐ. தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது.

____________________________________________

சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி

ஐதராபாத் அணிக்கு எதினான போட்டியில் மும்பை வெற்றிப்பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 102 ரன்கள் அடித்தார். இதையடுத்து சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது, இதை நான் நீண்ட நேரம் கழித்து செய்கிறேன். 14 டிசம்பருக்குப் பின் இப்போட்டியில் தான் முழுமையாக 20 ஓவர்கள்  பீல்டிங் செய்து 18 ஓவர்கள் பேட்டிங் செய்தேன். அதனால் கொஞ்சம் சோர்வு இருந்தது. மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை. அந்த நேரத்தில் நான் மும்பை அணிக்கு தேவைப்பட்டேன் என்று கருதினேன். 

குறிப்பாக கடைசி வரை ஒருவர் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் நான் சென்று விளையாடினேன். களத்தில் என்னுடைய நேரத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன். அது மும்பை ஸ்கூலின் கலையாகும். வான்கடே மைதானத்தில் நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். பந்து சீம் செய்வதை நிறுத்தியதும் நான் என்னுடைய அனைத்து ஷாட்டுகளையும் அடித்தேன். அதை நான் பயிற்சியில் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

____________________________________________

2 முக்கிய இந்திய வீரர்கள் 

டி-20 உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய வீரர்களாக செயல்படுவார்கள் என்று இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த தொடரில் 2 ஜென்டில்மேன்களை நீங்கள் பார்க்க வேண்டும். இருவருமே இடதுகை வீரர்கள். இருவருமே முதல் உலகக் கோப்பையில் விளையாடுகின்றனர். ஒருவர் ஜெய்ஸ்வால். அவரைப் பற்றி நமக்கு அதிகமாக தெரியும். இங்கிலாந்துக்கு எதிராக அபாரமாக விளையாடிய அவர் டாப் ஆர்டரில் பயமின்றி தம்முடைய ஷாட்டுகளை அடிக்கக் கூடியவர்.ஆனால் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய ஷிவம் துபேவை கண்டிப்பாக பாருங்கள். ஏனெனில் அவர் மேட்ச் வின்னர். வேடிக்கைக்காக சிக்சர்களை அடிக்கக்கூடிய இவர் ஸ்பின்னர்களை பந்தாடுவார். 

அவர் வெஸ்ட் இண்டீஸில் உள்ள மைதாங்களுக்கு வெளியே பந்தை அடிக்கக்கூடியவர். மிகவும் பெரியதாக நீண்ட தூரத்தில் சிக்சர்கள் அடிக்கக்கூடிய அவர் சுழல் பந்துகளை தெறிக்க விடுபவர். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் தன்னுடைய ஆட்டத்தில் வேலை செய்துள்ள அவர் 5, 6-வது இடத்தில் வெற்றிக்கான சாவியை பிடிக்கக்கூடியவர். ஒருவர் 20 - 25 பந்துகளில் போட்டியை மாற்றுவதற்கு தேவைப்பட்டால் அவர் தான் உங்களுடைய வீரர்.அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பெரும்பாலான சமயங்களில் 200-ஐ தொடும். டி20 உலகக் கோப்பை போன்ற தொடரில் 190, 200 ரன்களை அடித்து இந்தியா முன்னோக்கி செல்வதற்கு அவர் உதவுவார். எனவே இந்த இடது கை வீரரின் ஆட்டத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

____________________________________________

ரோகித்திற்கு யுவராஜ் புகழாரம்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. டி20 உலகக் கோப்பைத் தொடர் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர் எனவும், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவர் அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் ரோகித் சர்மா இருப்பது மிகவும் முக்கியமானது. நமக்கு நல்ல கேப்டன் தேவைப்படுவதாக நினைக்கிறேன். ரோகித் சர்மா மிகச் சிறந்த கேப்டன். அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர் அவர். அவரால் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்றுத் தர முடியும் என்றார்.

____________________________________________

கோவிலில் கொல்கத்தா வீரர்கள்

வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் நடைபெற்ற போட்டியில் விளையாடிய கொல்கத்தா அணி, லக்னோ சூப்பர் கெயிண்ட்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனைத் தொடர்ந்து, வருகின்ற சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை பிற்பகலில் கொல்கத்தாவுக்கு தனி விமானம் மூலம் வீரர்கள் புறப்பட்டனர்.

ஆனால், கொல்கத்தாவில் பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததால், வீரர்கள் சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு குவாஹத்தி விமான நிலையத்துக்கு திருப்பிவிட்டனர். குவாஹத்தியில் நீண்ட நேரம் காத்திருந்த கொல்கத்தா அணி வீரர்கள் சென்ற விமானம் மீண்டும் நள்ளிரவில் கொல்கத்தா சென்று தரையிறக்க முயற்சி செய்யப்பட்டது. மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டு லக்னோ விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, லக்னோவுக்கு மீண்டும் சென்ற வீரர்கள், வாரணாசி சென்று காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர். கொல்கத்தா அணி வீரர்கள் வாரணாசியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

____________________________________________

ஒலிபிக் போட்டிக்கு தகுதி

பஹாமாஸில் நடைபெறும் உலக தடகள ரிலே போட்டிகளில் 4*400 மீட்டர் ரிலேவில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கள் பிரிவுகளில் 2-ஆம் இடம் பிடித்து, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு திங்கள்கிழமை தகுதிபெற்று அசத்தின. இந்திய ஆடவர் அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், மகளிர் அணி ஆச்சர்யமளிக்கும் வகையில் பாரீஸ் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இதில் ஆடவர் அணிகளுக்கான 2-ஆவது சுற்று ஹீட்ஸில், முகமது அனாஸ் யாஹியா, முகமது அஜ்மல், ஆரோக்கிய ராஜீவ், அமோஜ் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 3 நிமிஷம் 3.23 விநாடிகளில் பந்தய இலக்கை எட்டி 2-ஆம் இடம் பிடித்தது. 

அதேபோல், மகளிர் அணிகளுக்கான 2-ஆவது சுற்று ஹீட்ஸிலும், ரூபல் சௌதரி, எம்.ஆர். பூவம்மா, ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய அணி, 3 நிமிஷம் 29.35 விநாடிகளில் 2-ஆவதாக இலக்கை எட்டினர். ஜமைக்க அணி 3 நிமிஷம் 28.54 விநாடிகளில் முதலாவதாக வந்தது. 2-ஆவது சுற்றின் 3 ஹீட்ஸ்களில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் என்பதால், இந்தியாவின் இருபால் அணிகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து