முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

29-வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்து பங்கேற்பு

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை, -  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில்  29-வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நிகழ்ச்சி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழா அமைச்சர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் சாலை பாதுகாப்பு குறித்த விதிமுறைகளின் விளம்பர பதாகைகள் ஏந்தி ஓட்டுநர் பயிற்சி மாணவர்கள் சென்றார்கள். மேலும் அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில்,
           சாலை பாதுகாப்பு வார விழா ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இதன்; நோக்கம் சாலை விபத்துக்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதேயாகும். அதற்காக வட்டார போக்குவரத்துறை மற்றும் அரசு போக்குவரத்துறையின் மூலம் பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாலையில் விபத்துக்களை தவிர்த்திடுவது என்பது வாகன ஓட்டுநர்கள் மட்டுமல்ல நடந்து செல்பவர்களும் கவனமாகச் சென்றால்தான் சாலையில் விபத்துக்களை தவிர்க்க முடியும். அதேபோல் அரசு பல்வேறு நிலைகளில் விதிமுறைப்படி வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. அதை ஒருசிலர் கண்டு கொள்ளாததால் விபத்து போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படுகிறது. சாலை விதிமுறைகளின்படி வாகன ஓட்டிகள் தங்களுரிய பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். அதேபோல் சாலையை கடக்கும் போது போக்குவரத்து விதிமுறைகளின்படி எங்கு சாலை கடக்க அனுமதிக்கப்பட்ட இடமோ அந்த இடங்களை மட்டுமே பயன்படுத்தினால் விபத்துக்களை தவிர்த்திடலாம். அதேபோல் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும். அதேபோல் சாலை கடப்பவராக இருந்தாலும் சரி, இருசக்கர வாகன ஓட்டியாக இருந்தாலும் சரி, கனரக வாகன ஓட்டியாக இருந்தாலும் சரி சாலையில் வாகனங்களை இயக்கும் பொழுது செல்போன் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்திட வேண்டும். மேலும் வாகனங்களை அதிவேகமாக இயக்குவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு முறையாக விதிமுறைகளை கடைப்பிடிக்கும் போது விபத்துக்கள் குறைந்து விடும்.
        இதை பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென திட்டமிட்டு இதற்காக 23.04.2018 முதல் 29.04.2018 வரை ஒருவாரம் காலம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. துவக்கமாக இன்று (23.04.2018) சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் பேரணி துவக்கப்பட்டு இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. 24.04.2018 அன்று வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் இருச்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மூலம்
முக்கிய வீதிகளின் வழியாக பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிதல், சீட்பெல்ட் அணிவதன் முக்கியவத்துவம் குறித்து எடுத்துரைக்கப்படுகின்றன. 25.04.2018 அன்று பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள், அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் கணினி மென்பொருள் பணியாளர்கள் ஆகியோருக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகின்றன. 26.04.2018 அன்று உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு அறிவுறுத்தலின்படி போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 27.04.2018 அன்று நான்கு வழிச்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதுடன் வாகன ஓட்டுநரின் சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் ஒட்டுதல் மற்றும் வாகனங்களை முந்தும்போது விதிமுறைகளை கடைபிடித்தல் குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். 28.04.2018 அன்று சாலையின் முக்கிய சந்திப்புகள், வாரச்சந்தைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியப் பகுதிகளில் அதிகளவில் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊர்காவல் படை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நிறைவாக 29.04.2018 அன்று சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி மேற்கொள்ளுதல் மற்றும் பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நிகழ்வு ஒருவார காலத்திற்கு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொருவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை ஏன் கடைபிடிக்க வேண்டும் அதன் அவசியம் என்ன என்பதை நன்கு உணரமுடியும். அந்த வகையில் அரசு பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்வு நன்றாக தெரிந்து கொண்டு ஒவ்வொருவரும் தன்னைத்தானே பாதுகாத்திடுவது மட்டுமன்றி தன் குடும்பத்தையும் பாதுகாத்திடும் வகையில் செயல்பட்டு தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்றிட ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டுமென கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
            இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவர், வட்டார ஆய்வாளர்கள் முருகன், அருண்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து