முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் அருகே கோரவிபத்து வேன் மீது லாரி மோதி 4 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தேங்காய்பட்டிணம் அருகே உள்ள கீழ்குளம் பகுதியை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் இரவு வேனில் கிளம்பி வேளாங்கன்னிக்கு சாமி கும்பிடுவதற்காக வந்து கொண்டிருந்தனர். இவர்கள் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் ராமநாதபுரத்தை கடந்து திருப்பாலைக்குடி அருகே வளமாவூர் விலக்கு கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் நோக்கி வந்த லாரி வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் மற்றும் லாரியின் முன்பகுதி நொறுங்கி பலத்த சேதமடைந்தது. இந்த கோரவிபத்தில் வேனில் பயணம் செய்த கீழ்குளம் பகுதியை சேர்ந்த அல்போன்ஸ் மகள் புனிதா(வயது32), தேங்காய்பட்டிணம் உக்ரோஸ் மகன் புஸ்பராஜ்(36), அவரின் மகன் ரிபான்(9)ஆகியோரும், வேன் டிரைவர் ஜான்பிளன்ட்(24) ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள்.
    நேருக்கு நேர் மோதி நடந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ராமச்சந்திரன் மகன் அஜீஸ்(17), அமர்தியம் மகன் ரிச்சர்ட்(35), அவரின் அண்ணன் சைலேஸ்(40), தங்கை செல்வி(28), சைலேஸ் மனைவி சிசிலி(32), சிறுவன் ரிவான்(3), ரியானு(2), கஜோலி(4), லிவி(4), விவினா(3),மெரிசன்(3), தர்சினி(7) மற்றும் லாரி டிரைவர் திருஉத்தரகோசமங்கை நல்லிருக்கை பகுதியை சேர்ந்த மங்களராமன் மகன் அய்யாசாமி(37) ஆகிய 13 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவம் பற்றி அறிந்த ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். காயம் பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டார். அதிகாலையில் நடந்த கோர விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் மாவட்டத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாலைக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து