முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்லைப்புற வளர்ப்பிற்கேற்ற கலப்பின கோழியினங்கள்

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

இந்தியாவிலுள்ள நாட்டு கோழியினங்கள் அதிக நோய் எதிர்ப்புத்திறன், வறட்சி மற்றும் கொன்றுண்ணி ஆகியவற்றை சமாளித்து வளரும் இயல்பு ஆகிய நற்குணங்களை கொண்டது. எனினும் சுமாரான முட்டை உற்பத்தி மற்றும் குறைந்த வளர்திறன் உடையது. எனவே அதிக முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காக உயரிய கலப்பினவகை கோழியினங்களின் தேவை மக்களிடையே அதிகரித்து வருகின்றது.

இவ்வகை கோழிகள் பல வண்ணம் உடையவையாக இருக்க வேண்டும். மேலும் முட்டைகள் பண்ணையாளர்கள் ஏற்கத்தக்க வகையில் பழுப்பு நிறமுடையவையாக இருக்க வேண்டும். அதிக நோய் எதிர்ப்பு, கொன்றுண்ணிகளிடமிருந்து தப்பிக்கும் திறன் உடையவையாக இருப்பதுடன் நாட்டுப்புற சூழலில் வளர ஏற்ற நல்ல மேய்ச்சல் திறன் கொண்டவையாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக, அவை வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக முட்டை உற்பத்தித்திறன் பெற்றிருக்க வேண்டும். வெளிநாட்டு இனங்களான பிளைமவுத் ராக், சிவப்பு கார்னிஷ், சிவப்பு போந்தாக் கோழி, ஆஸ்டரலார்ப் மற்றும் உள்நாட்டு இனங்களான அஸீல், கடக்நாத், நிக்கோபாரி ஆகியவை கொல்லைப்புற வளர்ப்பிற்கு ஏற்ற கலப்பினக் கோழிகளை இனவிருத்தி மூலம் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

‘கிரிராஜா’ கலப்பின கோழியினமானது கொல்லைபுற வளர்ப்பிற்கு ஏற்ற கோழியின இனவிருத்தியில் பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்களின் முதல் முயற்சி ஆகும். இது பெங்களூரிலுள்ள கால்நடை மருத்துவ கல்லூரியின் கோழியின அறிவியல் துறையால் உருவாக்கப்பட்டது. வெள்ளை பிளைமவுத் ராக், சிவப்பு கார்னிஷ் மற்றும் நியூஹாம்ஷயர் ஆகிய இனங்களின் கலப்பால் உருவாக்கப்பட்டது. வண்ண இறகுகள், அதிக முட்டை உற்பத்தி, அதிக உடல் எடை ஆகிய பண்புகளுக்காக இனவிருத்தி செய்யப்பட்ட இவ்வினம் மிக வேகமாக மக்களிடையே பிரபலமானது. ‘கிரிராணி’ அல்லது ஸ்வர்ணதாரா எனப்படும் புதிய இனமும் இந்த துறையிலிருந்து சமீபகாலத்தில் வெளியிடப்பட்டது. இது கிரிராஜாவைவிட சற்றே குறைவான உடல் எடை கொண்டது ஆனால் அதிக முட்டை உற்பத்தித்திறன் உடையது.

ஹைதராபாத்திலுள்ள கோழிகளுக்கான திட்ட இயக்குனரகத்தால் உருவாக்கப்பட்ட ‘வனராஜா’ கோழியினம் ஆண் வழி இனமாக சிவப்பு கார்னிஷ் மற்றும் பெண் வழி இனமாக வண்ண பிராய்லர் ஆகியவற்றின் கலப்பாகும். அதன் பின்னர் இந்த இயக்குனரகத்தால் உருவாக்கப்பட்ட ’கிராமபிரியா’ கலப்பினமானது வண்ண பிராய்லர் இனத்தை ஆண் வழியாகவும் வெள்ளை லகார்ன் இனத்தை பெண் வழியாகவும் கொண்டு உருவாக்கப்பட்ட கலப்பினமாகும். வெள்ளை இறகுகள் மற்றும் வண்ண இறகுகள் கொண்ட இரண்டு வகைப்பட்ட கிராமபிரியா கோழிகள் நடுத்தர உடல் எடையுடன் நல்ல முட்டையிடும் திறன் உடையவையாகும். இளஞ்சேவல்கள் தந்தூரி சிக்கன் தயாரிப்புக்கு மிகவும் பொருத்தமானது.

விவசயிகளிடையே அதிகரித்துவரும் தேவைக்கேற்ப மேலும் பல பொதுத்துறை நிறுவனங்கள் கொல்லைப்புற வளர்ப்பிற்கு ஏற்ற இனங்களை இனவிருத்தி செய்தன. அவற்றில் குறிப்பாக ‘நந்தனம் கோழி-1’ கலப்பினமானது சிவப்பு போந்தக்கோழி இனத்திலிருந்து முட்டை உற்பத்திக்கான தெரிவு மூலம் உருவாக்கப்பட்டதாகும். மேலும் ‘நந்தனம் கோழி-2’ எனப்படும் கோழியினமானது பலவண்ண கறிக்கோழி வகையிலிருந்து இனவிருத்தி செய்து உருவாக்கப்பட்டதாகும். முட்டைக்காக இனவிருத்தி செய்யப்பட்ட ‘நந்தனம் கோழி-4’ இனமானது சிவப்பு போந்தாக்கோழி மற்றும் வெள்ளை லகார்ன் ஆகியவற்றின் சேர்க்கையால் உருவாக்கப்பட்டதாகும்.

கேரளா வேளாண்மை பல்கலைக்கழகம் (தற்போதைய கேரளா கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்) ஆஸ்ட்ரலார்ப் (ஆண் வழி) மற்றும் வெள்ளை லகார்ன் (பெண் வழி) ஆகியவற்றை கலப்பு செய்து முட்டை உற்பத்திக்காக ‘கிராமலட்சுமி’ என்ற இனத்தையும், சிவப்பு போந்தகோழி, பிளைமவுத்ராக், நியுஹாம்ஷயர் மற்றும் வெற்றுக்கழுத்து இனம் ஆகியவற்றை கலப்பு செய்து ‘கிராமஸ்ரீ’ என்ற இனத்தை இறைச்சி உற்பத்திக்காகவும் வெளியிட்டது. அதே காலகட்டத்தில் மத்திய பறவையின ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “காரிகோல்டு” ஆண் வழியில் சிவப்பு போந்தாக்கோழியையும் பெண் வழியில் வெள்ளை லகார்ன் கோழி ஆகியவற்றையும் கொண்ட முட்டை உற்பத்திக்கான கலப்பினமாகும். புவனேஸ்வரத்திலுள்ள மத்திய கோழியின மேம்பாட்டு அமைப்பால் இனவிருத்தி செய்யப்பட்ட ‘கலிங்கா பிரவுன்’ கோழியினமானது ஆண் வழியில் சிவப்பு போந்தாக்கோழி மற்றும் பெண் வழி வெள்ளை லகார்ன் ஆகியவற்றின் கலப்பு ஆகும்.

மேலே கூறப்பட்ட வகைகள் அனைத்தும் கிட்டதட்ட அயல்நாட்டு கோழியினாங்களின் முழுமையான கலப்பினங்களாகும். புறக்கடை கோழி விவசாயிகளிடையே இவ்வினங்கள் பிரபலமானவை என்றாலும், இந்த இனங்கள் கொன்றுண்ணிகளால் எளிதாக பிடிக்கப்படுதல், அதிக உற்பத்திக்கு மேய்ச்சலுடன் அடர்தீனி தேவைப்படுதல், அடைகாக்கும் தன்மை இல்லாமை, சுய இனப்பெருக்கம் இயலாமை ஆகிய குறைபாடுகளை கொண்டவை ஆகும். எனவேதான் சமீபகாலாங்களில் இந்த குறைபாடுகளை களையும் விதமாக இந்திய கோழியினங்களையும்  உட்படுத்தி உருவாக்கப்பட்ட கலப்பினங்களுக்கு புறக்கடை கோழி வளர்ப்போரிடமும் ஆழ்கூழமுறை நாட்டுகோழி வளர்ப்போரிடமும் வரவேற்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் ஜபல்பூரிலுள்ள விவசாய பல்கலைகழகத்தால் உருவாக்கப்பட்ட கிருஷ்ணா-ஜே வகை குள்ளத்தன்மை மரபணுவை உட்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.

மேலும் இசட்நகரிலுள்ள மத்திய பறவையின ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ‘கரி-நிர்பீக்’, ‘கரி-ஷ்யாமா’, ‘உப்காரி’, ‘ஹிட்காரி’ போன்ற இனங்கள் முறையே அஸில், கடக்நாத், சில்பா, வெற்று கழுத்துக் கோழி ஆகிய இனங்களை சிவப்பு டெல்காம் கோழி இனத்துடன் கலப்பு செய்து உருவாக்கப்பட்டவை ஆகும். ஹைதராபாத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் உருவாக்கப்பட்ட ‘ராஜஸ்ரீ’ இனம் மூன்று அயல்நாட்டு இனங்களுடன் 25ரூ என்ற அளவில் உள்நாட்டு கோழியினத்தை கலப்பு செய்து உருவாக்கப்பட்டதாகும். ‘நாமக்கல் கோழி-1’ இனமானது வெள்ளை லகார்ன், சிவப்பு போந்தாக்கோழி, கடக்நாத் மற்றும் வெற்று கழுத்து கோழி ஆகியவற்றின் கலவையாகும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொல்லைப்புற வளர்ப்பிற்கு ஏற்ற இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கான கலப்பின கோழிவகைகள் பின்வருமாறு.

இறைச்சிக்கோழி வகைகள்

வகைகள், விவரங்கள்,

கிரிராஜா

பெங்களுரிலுள்ள கால்நடை மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.
பண்புகள்: கவர்ச்சியான தோற்றம்; நாட்டு கோழிகளை விட மூன்று மடங்கு அதிக உடல் எடை (20 வாரத்தில் 2.5 கிலோ) மற்றும் முட்டை உற்பத்தி; கடுமையான சுற்றுச்சூழலுக்கும் ஒத்துப்போகும் உறுதியான உடலமைப்பு; நல்ல ஓடு தடிமன் கொண்ட பழுப்பு-வெள்ளை நிற முட்டைகள். 
  
வனராஜா

ஹைதராபாத்திலுள்ள கோழியின திட்ட இயக்குனரகத்தில் உருவாக்கப்பட்டது.
பண்புகள்: கவர்ச்சியான பலவண்ண இறக்கைகள்; நல்ல உயிர் வாழும் திறன்; வேகமான வளர்ச்சி (10 வாரத்தில் 1.2 முதல் 1.5 கிலோ எடை); பெரிய பழுப்பு நிற முட்டைகள்; அதிக நோய் எதிர்ப்புத்தன்மை. 
 
நந்தனம் இறைச்சி கோழி-2

சென்னையிலுள்ள தழிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்தின் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையத்தில் உருவாக்கப்பட்டது.

பண்புகள்: பலவண்ண இறக்கைகள்; பழுப்பு நிற முட்டைகள்; புறக்கடை வளர்ப்பில் நல்ல உயிர் வாழும் திறன்; நல்ல உடல் எடை (10 வாரத்தில் 1.2 முதல் 1.5 கிலோ); அதிக எடை (58 கி) உடைய பழுப்பு நிற முட்டைகள்; ஆழ்கூளமுறை வளர்ப்பிற்கும் ஏற்றது.
   
கிராமஸ்ரீ 

கேரள மாநிலத்தில் திருச்சூரில் உள்ள  கேரள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழத்தின் கோழிப் பண்ணையில் உருவாக்கப்பட்டதது.
பண்புகள்: பலவண்ண இறகுகள்: நல்ல முட்டை எடை; நடுத்தர எண்ணிக்கையிலான நல்ல பழுப்பு நிற முட்டைகள்; வேகமான வளர்ச்சி (12 வாரத்தில் 1.5 கிலோ); கிராமப்புற வளர்ப்பிற்கு ஒத்துப்போகும் தன்மை; நல்ல உயிர் வாழும் திறன்.
 
முட்டைக்கோழி வகைகள்

கிராமபிரியா

ஹைதராபாத்திலுள்ள கோழியின திட்ட இயக்குனரகத்தில் உருவாக்கப்பட்டது.
பண்புகள்: நல்ல எடை (58 கி) உடைய அதிக முட்டைகள் (ஆண்டுக்கு 240); திறந்தவெளி வளர்ப்பிற்கு எற்றது; பழுப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த முட்டைகள்; சிறந்த உயிர் வாழும் திறன்; நடுத்தர உடல் எடை; நீளமான கீழ்க்கால் உடையதால் கொன்றுண்ணிகளிடமிருந்து எளிதில் தப்பிக்கும் திறன்.
   
நந்தனம் கோழி-1

 சென்னையிலுள்ள தழிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்தின் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையத்தில் உருவாக்கப்பட்டது.

பண்புகள்: கருஞ்சிவப்பு இறகுகள்; நடுத்தர அளவிலான உடல் அமைப்பு; சிறந்த முட்டை (ஆண்டுக்கு 220 முட்டைகள்) மற்றும் இறைச்சி உற்பத்தித்திறன்; பழுப்புநிற முட்டைகள். 
 
நந்தனம் கோழி -4

 சென்னையிலுள்ள தழிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்தின் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையத்தில் உருவாக்கப்பட்டது.

பண்புகள்: பல வண்ண இறக்கைகள்; நல்ல எடை (52கி) உடைய அதிக முட்டைகள் (ஆண்டுக்கு 225 முட்டைகள்); கொல்லைப்புற வளர்ப்பிற்கு எற்றது; நடுத்தர உடல் எடை; பழுப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த முட்டைகள்; சிறந்த உயிர் வாழும் திறன். 
  
நாமக்கல் கோழி -1 

 நாமக்கலில் உள்ள தழிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்தின் கால்நடை மருத்துவ கல்லூரியில் உருவாக்கப்பட்டது. 

பண்புகள்: பலவண்ண இறகுகள்; நடுத்தர உடல் எடை; அதிக முட்டை உற்பத்தி (ஆண்டுக்கு 240 முட்டைகள்); சிறந்த நோய் எதிர்ப்புத் திறன்; கொன்றுண்ணிகளிடமிருந்து தப்பிக்கும் திறன்; கொல்லைப்புற வளர்ப்பிற்கான தகவமைப்பு.
   
கிராமலட்சுமி

கேரள மாநிலத்தில் திருச்சூரில் உள்ள  கேரள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழத்தின் கோழிப் பண்ணையில் உருவாக்கப்பட்டத்து.

பண்புகள்: சின்னஞ்சிறு கருப்பு நிற புள்ளிகள், பொட்டுகள் உடைய வெள்ளை இறகுகள்; அதிக முட்டை உற்பத்தி (ஆண்டுக்கு 260 முட்டைகள்); கொல்லைப்புற வளர்ப்பிற்கு சிறந்தது; நல்ல தகவமைப்புத்திறன்; இளம் பழுப்பு நிற முட்டைகள்.
   
காரி -நிர்பீக் (அஸில் கலப்பினம்)

 உத்திரபிரதேசம் இசாட்நகரிலுள்ள மத்திய பறவையின ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.

பண்புகள்: பெரிய உடல் அமைப்பு (20 வாரத்தில் 1.5 கிலோ); நீண்ட கீழ்கால்; வேட்டையாடப்படுவதை தவிர்ப்பதற்கான அக்ரோஷம்; பல்வேறு தட்பவெப்ப பகுதிகளுக்கு ஒத்துப்போகும் தன்மை; பெரிய பழுப்பு வண்ண முட்டைகள்; அதிக முட்டைகள் (ஆண்டிற்கு 160 முட்டைகள்); அதிக நோய் எதிர்ப்புத்தன்மை; சுய இனப்பெருக்கத் திறன் மற்றும் நல்ல தாய்மைத்திறன்.   

ஹிட்காரி (வெற்று கழுத்து கோழி கலப்பினம்)

உத்திரபிரதேசம் இசாட்நகரிலுள்ள மத்திய பறவையின ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.

பண்புகள்: பெரிய உடல் அமைப்பு; நீண்ட கீழ்கால்; அதிக வெப்பபரிமற்றத்திற்கு ஏதுவான இறக்கைகளற்ற வெற்றுக்கழுத்துப்பகுதியால் அதிக வெப்ப சூழ்நிலையையும் தாங்கும் திறன்; பல்வேறு தட்பவெப்ப பகுதிகளுக்கு ஒத்துப்போகும் தன்மை; பெரிய அளவுள்ள சிவப்பு நிற முட்டைகள்; மேம்படுத்தப்பட்ட முட்டை உற்பத்தி; அதிக நோய் எதிர்ப்புத்திறன்; சுயமாக அடைக்காக்கும் இனப்பெருக்கத்தன்மை.
   
காரி – ஷ்யாமா

உத்திரபிரதேசம் இசாட்நகரிலுள்ள மத்திய பறவையின ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.

பண்புகள்: நடுத்தர உடல் அமைப்பு; அதிக எண்ணிக்கையிலான முட்டை உற்பத்தி (ஆண்டுக்கு 165 முட்டைகள்); நல்ல பழுப்பு நிற முட்டைகள்; நல்ல தகவமைப்புத்திறன்; அதிக நோய் எதிர்ப்புத்திறன். 
   
உப்காரி (சில்பா கலப்பினம்)

உத்திரபிரதேசம் இசாட்நகரிலுள்ள மத்திய பறவையின ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.

பண்புகள்: எளிதான வெப்ப பரிமாற்றத்திற்கு உகந்த சில்பா இறகுகள்; வெப்பமண்டல தகவமைப்பு; அதிக முட்டை உற்பத்தி (ஆண்டுக்கு 175 முட்டைகள்); அதிக உயிர் வாழும் திறன்.

ப.ரவி,   து. ஜெயந்தி  மற்றும் நா. ஸ்ரீபாலாஜி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம் – 636 001

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து