முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுப்புற சூழலை மாசில்லாமல் வைத்திட திடக்கழிவு மேலாண்மையினை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்: தேனி கலெக்டர்

வியாழக்கிழமை, 31 மே 2018      தேனி
Image Unavailable

 தேனி, - சுற்றுப்புறச் சூழல்களான நீர், நிலம், காற்று ஆகியவற்றை மாசில்லாமல் வைத்திட திடக்கழிவு மேலாண்மையினை பொதுமக்கள் நல்ல முறையில் கடைபிடித்திட வேண்டும் என்று தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய (வடுகபட்டி) அலுவலகத்தில், விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், அரசுத்துறைகளுடன் இணைந்து பொதுமக்கள் குளங்களை தூர் வாருதல், ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றுதல், ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல், கூட்டுப்பண்ணையத் திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம், குடிமராமத்துப் பணிகள், இயற்கை உரங்கள் தயாரித்தல், அரசின் சார்பில் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார்.     
விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு தேவையான பாதை வசதி, தடுப்பணைகள் ஏற்படுத்துதல், உலர் கலங்கள் அமைத்தல், நெடுங்குளம் கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரித்திடவும், வெற்றிலை பதப்படுத்தும் கிட்டங்கி அமைத்தல், மாங்காய் சார்ந்த தொழில்கள் ஏற்படுத்துதல், வேளாண் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மானியம் வேண்டுதல் என்பது உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்திற்குப்பின் கலெக்டர் தெரிவிக்கையில், தமிழக அரசு வேளாண் பெருங்குடி மக்களின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் தங்களது இல்லங்கள் மற்றும் பொது இடங்களில் உருவாகும் குப்பைகளை கண்ட இடங்களில் வீசி எறியாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பின்னர் தூய்மை காவலர்கள் குப்பை சேகரிக்க வருகின்ற போது வழங்கிட வேண்டும். மக்கும் குப்பைகளை பயன்படுத்தி இயற்கை உரமாகவும், மக்காத குப்பைகள் மூலம் மறு சுழற்சி முறையில் தார் சாலை அமைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறச் சூழல்களான நீர், நிலம், காற்று இவற்றை மாசில்லாமல் வைத்திட திடக்கழிவு மேலாண்மையினை நல்ல முறையில் கடைபிடித்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் கௌதம், மாவட்ட வன அலுவலர் (பயிற்சி) குருசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்   திலகவதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகம்மது அப்துல் நசீர்,  பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்ரிதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கிஷோர்குமார்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி, வேளாண் பெருங்குடி மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து