அதிவேகத்தில் இயக்கும் வாகனங்களின் உரிமங்களை ரத்து செய்திட வேண்டும் சிவகங்கை கலெக்டர் லதா உத்தரவு

siva news

சிவகங்கை,- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (26.07.2018) சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,
          சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பணிகளை முழுமையாக மேற்கொள்ளும் விதமாக ஒவ்வொரு மாதமும் கலந்தாலோசித்து திட்டமிட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனைடிப்படையில் பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமான பணியாகும். அதற்கேற்ப ஆங்காங்கே சில குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்களை கண்டறியப்பட்டால் அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் வட்டாட்சியர்களும் தங்கள் கவனத்திற்கு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். பொதுவாக அமைதியாக இருந்து வரும் பொதுமக்களிடம் சில நபர்கள் வீண் வதந்தி போன்ற தகவல்கள் தெரிவித்து சட்ட ஒழுங்கை கெடுத்திடும்; விதமாக செயல்படுவார்கள். அதை முழுமையாக கண்காணித்திட வேண்டும்.
        மேலும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஊரகச் சாலைகளில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது கண்டறியப்பட்டால் அந்த இடங்களை தொடர்புடைய அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை மேற்கொள்வதுடன் அவ்வப்போது காவல்துறையினரின் ஆலோசனை பெற்று அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நான்கு வழிச்சாலைகளில் பொதுமக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு சாலைகளில் இருபக்கங்களில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பகுதிகளில் ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து அகற்றுவதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குரிய பணிகளுக்கு காவல்துறையுடன் வருவாயத்துறை மற்றும் பேரூராடசித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதேபோல் காளையார்கோவில், திருப்புவனம், காரைக்குடி மற்றும் சிங்கம்புணரி பகுதிகளில் நீண்டநாளாக உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சாலைகளில் விபத்து ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்ட குழு உடனடியாக சென்று விபத்து காரணம் குறித்து அறிக்கை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் தொடர்ந்து விபத்துகள் ஏற்படாதவண்ணம் தக்க மேல்நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். தற்பொழுது அதற்காக புதிய வாட்சப் குரூப் துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் காவல்துறை, வட்டாரப் போக்குவரத்துத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து இப்பணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளன. மேலும் சாலைகளில் போக்குவரத்து அதிகமுள்ள இடங்களை கண்டறிந்து ஒளிரும் வில்லைகள் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்திட வேண்டும்.
         அதேபோல் வட்டார போக்குவரத்து அலுவலக மூலம் குழு நியமித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சாலைகளில் அதிவேகத்தில் பேருந்துகள் இயங்குவது கண்டறிந்தால் ஓரிருமுறை எச்சரிக்கை விடுத்து மிதமான வேகத்தில் இயக்க அறிவுறுத்த வேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி தொடர்ந்து அதே பேருந்து அதிவேகத்தில் செல்வது கண்டறிந்தால் உடனடியாக உரிமத்தை இரத்து செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களில் அதிவேகத்தில் செல்வது மற்றும் விதிமுறைகளுக்கு முரணாக அதிக நபர்கள் செல்வது எனக் கண்டறிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணியின் போது வட்டாரப் போக்குவரத்துத் துறையின் மூலம் காவல்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு திட்டமிட்டு செயல்பட்டால்தான் மாவட்ட அளவில் விபத்துக்களை முழுமையாக குறைக்க முடியும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, தெரிவித்தார்.
        இக்கூட்டத்தில் தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத், மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து