பாக். நாடாளுமன்ற புதிய அவைதலைவருக்கு இம்ரான் வாழ்த்து

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018      உலகம்
Imran-2018-08-16

இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான்கானின் தெஹ்ரிக் - ஏ - இன்சாப் கட்சியைச் சேர்ந்த ஆசாத் குவைசர் வெற்றி பெற்றார்.

342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவைக்கு நடந்த தேர்தலில் இம்ரான்கானின் தெஹ்ரிக்-ஏ-இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

சிறிய கட்சிகளுடன் ஆதரவுடன் வரும் 18-ம் தேதி இம்ரான்கான் பிரதமராக பதவியேற்கவுள்ளார். இதனிடையே, புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற முதல் நாடாளுமன்றக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில், இம்ரான்கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ, முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி உள்பட 329 புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதில், தெஹ்ரிக்-ஏ-இன்சாப் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆசாத் குவைசர் 176 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சையத் குர்ஷித் ஷாவுக்கு 146 வாக்குகளே கிடைத்தன. 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

புதிய அவைத் தலைவராக தேர்வான ஆசாத் குவைசருக்கு, ஏற்கெனவே அப்பதவியை வகித்து வந்த அயாஸ் சாதிக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், எதிக்கட்சித் தலைவர்களுடன் ஆசாத் குவைசர் கைகுலுக்கினார்.

மேலும், அவை துணைத் தலைவர் தேர்தல், ஆசாத்தின் மேற்பார்வையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து