முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: சரியான தொடக்கம் கிடைக்காததால் தோல்வியடைந்தோம்: கேப்டன் கோலி

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

சவுதாம்டன் : ’இந்தப் போட்டியை வெல்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று நினைத்திருந்தேன். ஆனால் சரியான தொடக்கம் கிடைக்காததால் தோல்வியடைந்தோம்’ என்று இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி கூறினார்.

குர்ரன் 78 ரன்கள்...

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் சாம் குர்ரன் 78 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தரப்பில் பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.

271 ரன்களுக்கு...

இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 273 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. புஜாரா அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 5 விக்கெட்டுகளையும் பிராட் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். 27 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நேற்று முன்தினம் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பட்லர் 69, ஜோ ரூட் 48, குர்ரன் 46 ரன்கள் எடுத்தனர். நான்காவது நாளில் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து மீதமுள்ள இரண்டு விக்கெட்களையும் உடனடியாக இழந்தது. அந்த அணி 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ஷமி 4 விக்கெட்கள் சாய்த்தார்.

இந்தியா தடுமாற்றம்...

இதனையடுத்து 245 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சை  விளையாடியது. ரன் கணக்கையே துவங்காமல் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க, புஜாரா 5, தவான் 17 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.  இந்த இக்கட்டான நேரத்தில் கேப்டன் விராத் கோலி, ரஹானே ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால், இந்திய அணியின் ரன் ரேட் மெள்ள உயர்ந்தது.

கோலி 58 ரன்கள்...

42.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோலி 114 பந்துகளில் அரைசதம் அடித்தார். 4வது விக்கெட்டுக்கு விராத் - ரஹானே ஜோடி 100 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்தது. அப்போது கேப்டன் விராத் கோலி 58 ரன்னில் மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. மொயின் அலி 4 விக்கெட்கள் சாய்த்தார். இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் 4வது டெஸ்ட் போட்டியை வென்றது. அதோடு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

வாய்ப்பிருக்கிறது...

தோல்விக்கு பின் பேசிய விராத் கோலி, ‘முந்தைய நாள் இரவு, இந்தப் போட்டியை வெல்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று நினைத்திருந்தேன். ஆனால் சரியான தொடக்கம் எங்களுக்கு கிடைக்கவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி எங்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார்கள். போட்டி முழுவதுமே எங்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தார்கள். நானும் ரஹானேவும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த நினைத்தோம். எதிர்பாராதவிதமாக விக்கெட்டுகள் விழுந்ததால் எங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது.

இந்த போட்டியில் புஜாரா சிறப்பாக ஆடினார். இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். அவர்கள் எங்களை விட சிறப்பாக ஆடினார்கள். இந்தப் போட்டியை வெல்ல அவர்கள் தகுதியானவர்கள்தான். இந்தப் போட்டியில் இருந்து பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக்கொண்டு அடுத்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்’ என்றார்.  அடுத்தப் போட்டி வரும் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து