முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை இனப் படுகொலை குறித்து ஸ்டாலின் மவுனம் சாதிப்பது ஏன்? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,கடப்பாரையை விழுங்கிய கல்லுளிமங்கன் போல முழிக்கும் ஸ்டாலின், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து  மவுனம் சாதிப்பது ஏன்? என்று அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்காக புது டெல்லி சென்ற மீன்வளத்துறை மற்றும் அரசு பணியாளர் சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-பிரியாணி கடையில் பாக்சிங் நடத்துவது, பியூட்டி பார்லரி்ல் பெண்ணை காலால் எட்டி உதைத்து அவமானப்படுத்துவது, டீக்கடையில் வன்முறையில் ஈடுபடுவது என்று தி.மு.க.வினரிடையே பஞ்சாயத்து செய்வதே மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பணியாகி விட்டது. பொதுமக்களை பாதிக்கும் அளவுக்கு தி.மு.க. எந்தளவுக்கு வன்முறையில் ஈடுபட்டு வருகிறது என்பதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த பஞ்சாயத்துகளை தீர்ப்பதற்கே ஸ்டாலினுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

காற்றாலை மின்சாரம் குறித்து மு.க.ஸ்டாலின் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கமணி தெளிவான விளக்கம் அளித்து விட்டார். எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை என்று அமைச்சர் தெளிவுப்படுத்தி இருக்கிறார். மு.க.ஸ்டாலின் எந்த வழக்கும் போடட்டும். அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தனியார் நிறுவனத்திடமிருந்து வந்து சேர வேண்டிய பணத்தை அரசுக்கு சேர்க்க வழிவகுத்ததே அம்மாவின் ஆட்சி தான். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் வழக்கு போடட்டும். சந்திக்க தயாராக இருக்கிறோம்.

என்னை அரிச்சந்திரன் என்று கூறியதற்கு கருணாசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அவருக்கு நாக்கில் சனி. அதற்காக அவர் என்னென்ன அனுபவிக்க போகிறார் என்பதை பார்க்கத்தான் போகிறோம். எல்லா சமூகத்தையும் கேவலமாக பேசுவதை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி பேசத் தொடங்கினால் சாதிக்கலவரம் தான் வெடிக்கும். அதைத்தான் அ.தி.மு.க. சார்பில் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். ஆனால் நடிகர் கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லையே. எல்லா சமூதாயத்தையும் கேவலமாக பேசிய கருணாசுக்கு ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏன் வாய்மூடி மவுனமாக இருக்கிறார். ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். அது குறித்து ஸ்டாலின் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எங்களை நோக்கி ஊழல் என்று சுட்டுவிரல் நீட்டும் ஸ்டாலினை கேட்கிறேன், தி.மு.க. ஆட்சியில் நடந்தென்ன சர்க்கரை பேரத்தில் ஊழல், பூச்சிமருந்தில் ஊழல், எங்கும் ஊழல் எதிலும் ஊழல் தானே தி.மு.க. ஆட்சியில் நடந்தது.

ஒட்டுமொத்தமாக ஊழல் சாம்ராஜ்யத்தையே நடத்தியவர்கள் தான் தி.மு.க.வினர். தமிழகத்தில் ஊழலின் காரணமாக கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி சொத்து சேர்த்தவர்கள் தி.மு.க.வினர் இந்த சொத்துக்கள் எப்படி வந்தது என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டது சீல் வைக்கப்பட்டது தான். அது குறித்து நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தேவையில்லை என்பது தான் தமிழக அரசின் கருத்து. ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். இலங்கையில் நம்முடைய தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் படுகொலை என்பது தி.மு.க.வும் காங்கிரசும் சேர்ந்து செய்தது தான் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக வரும் 25-ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்த இருக்கிறோம்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை நிகழ்த்தப்பட்ட போது ஆட்சியில் இருந்தது யார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்தது தி.மு.க. தானே அப்போது கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகத்தின் காரணமாக பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்த தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்றைக்கு மட்டும் தி.மு.க. மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியிருந்தால் அந்த படுகொலை நடந்திருக்குமா, ஒன்றரை லட்சம் தமிழர்கள் செத்து மடிந்திருப்பார்களா அது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இதுவரை வாய்திறக்கவில்லையே ஏன் கடப்பாரை முழுங்கி விட்டு கல்லுளிமங்கன் போல ஏமாற்றுவதில் கில்லாடி ஸ்டாலின். ஆனால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து