பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கிராமசபை கூட்டம்
தேனி - பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 150வது காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெற்றது. இக்கிராமசபை கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டினை தடை செய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்த விவாதம், இப்பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து தெரிவித்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடபுதுப்பட்டி
வடபுதுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் கணபதி தீர்மானங்களை வாசித்தார். பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் பாலமுருகன் மேற்பார்வையிட்டார். கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நியாயவிலைக்கடையினர் மற்றும் 140க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
லெட்சுமிபுரம்
லெட்சுமிபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் லெனின் தீர்மானங்களை வாசித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலர் மேற்பார்வையிட்டார். இக்கூட்டத்தில் ஊராட்சி அலுவலகத்திற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள குப்பை வண்டியை நன்கொடையாக வழங்கிய சரவணன்-நர்மதா தம்பதியினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறப்பாக பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சான்றிதழும், பொன்னாடையும் போர்த்தப்பட்டது. 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்
மேல்மங்கலம்
மேல்மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் செயலர் கோபாலகிருஷ்ணன் தீர்மானங்களை வாசித்தார். பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் மகளிர் திட்ட அலுவலர் சாந்தா மேற்பார்வையிட்டார். சிறப்பாக பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பொன்னாடையும் போர்த்தப்பட்டது. 220க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் முழு சுகாதாரம், திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கமற்ற ஊராட்சிகளாக தொடர்ந்து பராமரித்தல், மகளிர் திட்ட பணிகள், காசநோய் விழிப்புணர்வு உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.