முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிக்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
திண்டுக்கல் அருகிலுள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன மலையப்பன்(55). விவசாயி. கடந்த சில வருடங்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு டாக்டரிடம் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்ன மலையப்பனுக்கு எலும்பு மூட்டுகள் அதிக அளவில் தேய்மானம் அடைந்திருந்ததை அறிந்தனர். மேலும் வலதுகால் பக்கவாட்டில் வளைந்து இருந்ததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து 2 முழங்கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக கடந்த 17ம் தேதி மருத்துவமனையில் உள்நோயாளியாக சின்னமலையப்பன் சேர்க்கப்பட்டார். சர்க்கரை நோயாளியான அவருக்கு முதலில் சர்க்கரையின் அளவு குறைக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாலதி பிரகாஷ் அறிவுரையின் பேரில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணி, நிலைய மருத்துவ அதிகாரி சிவக்குமார் ஆலோசனையில் எலும்பு முறிவு  தலைமை மருத்துவர் வடிவேல் தலைமையில் டாக்டர்கள் செந்தில்குமரன், சிவக்குமார், லலித்குமார், மயக்கவியல் டாக்டர் கார்த்திகேயன் அடங்கிய குழுவினர் சின்ன மலையப்பனுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. டாக்டர்கள் சின்ன மலையப்பனின் வலதுகால் மூட்டை மாற்றியதுடன் பக்கவாட்டில் வளைந்து இருந்த பகுதியையும் சரி செய்தனர்.
இதுகுறித்து இணை இயக்குனர் டாக்டர் மாலதி பிரகாஷ் தெரிவிக்கையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இது தனியார் மருத்துவமனையில் செய்ய வேண்டுமானால் சுமார ரூ.2.50 லட்சம் செலவாகும். ஆனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அவர் வீட்டிற்கு செல்லலாம். மேலும் சில நாட்கள் கழித்து அவர் முன்பு போல் வழக்கமான பணியை மேற்கொள்ளலாம். இனி வரும் காலங்களில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து