முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் மேகதாது விவகாரத்தில் எதிர்ப்பு: அ.தி.மு.க. எம்.பி.க்கள் முழக்கத்தால் 2-வது நாளாக அவை ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மேகதாது விவகாரத்தை எழுப்பி அ.தி.மு.க. எம்.பி.க்களின் முழக்கத்தால் அமளி ஏற்பட்டதையடுத்து பாராளுமன்ற அவை நேற்று 2-வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது.

விவாதிக்க வலியுறுத்தல்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் மறைவுக்கு முதல் நாளில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று முன்தினம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் முடங்கின. அ.தி.மு.க உறுப்பினர்கள் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் அமளி நீடித்தது. இதன் காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நேற்றும் தொடர்ந்தது...

இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் மேகேதாட்டு விவகாரத்தை எழுப்பினர். கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவையை நடத்த முடியாமல் இரண்டு முறை அவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது. மூன்றாவது முறை அவை கூடியபோதும், அ.தி.மு.க. உள்ளிட்ட எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களைவை...

இதேபோல் மாநிலங்களைவை நேற்று காலை கூடியதும் நாடாளுமன்றத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 17-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து