முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீண்டகால நோய்களுக்கு சரியான பயன் கிடைப்பது சித்த மருத்துவத்தில்தான் அமைச்சர் ஜி.பாஸ்கரன்

புதன்கிழமை, 26 டிசம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

  சிவகங்கை,-சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட சித்த மருத்துவத்துறையின் மூலம் 2-ஆம் தேசிய சித்தா தின நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் சித்த மருத்துவ முகாமை துவக்கி வைத்து மருத்துவ முகாமை பார்வையிட்டு பேசுகையில்,
    இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா   முதல்வராக இருந்த காலக்கட்டத்தில்தான் சித்த மருத்துவத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு வழங்கி தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்ததுடன் ஒவ்வொரு தலைமை மருத்துவமனையிலும் சித்தா பிரிவு அமைக்கப்பட்டதுடன் அதிகளவு மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தை பொறுத்தவரை பாரம்பரிய மருத்துவ குணம் கொண்டதாக வரலாற்று சிறப்பாகும். இதை மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அகஸ்தியர் மாமுனிவர் பிறந்த தினத்தையொட்டி தேசிய சித்தா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றையதினம் மாவட்ட அளவில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதுடன் தேவையான சிகிச்சைகளை தொடர உரிய சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளைப் பெற்று பயன்பெறும் வகையில் நடைபெறுகின்றன. இன்று இந்த முகாமில் சுமார் 300-க்கு மேற்பட்ட மூலிகைச் செடிகள் பொதுமக்களின் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு மருத்துவக் குணம் கொண்டவையாகும்.
       இதன் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை குணமாகக் கொண்ட வாதம், பித்தம், கவம் இவற்றை மையமாக வைத்து 6 சுவைகள் கொண்ட முறையில் மருந்துகள் தயாரிக்கப்பட்டு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முழுக்க முழுக்க பாரம்பரிய குணம் கொண்டவையாகும். தொடர் நோய் சிகிச்சை பெறுபவர்கள் சித்த வைத்தியத்தில் சிகிச்சை பெற்றால் நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வகையில் நோய்கள் முழுமையாக குணமாகும்;. அதுமட்டுமன்றி சித்த மருத்துவத்தில் ஆயுர்வேதா, யுனானி, யோகா போன்ற சிகிச்சை முறைகளும் வழங்கப்படுவதால் நோயாளிகளுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் கிடையாது. அதுமட்டுமன்றி பாமர மக்களும் பயன்பெறும் வகையில் மிகமிக குறைவான கட்டணத்திலே அத்தனை சிகிச்சைகளையும் பெற்று பயன்பெறலாம். எனவே பொதுமக்கள் இதை உணர்ந்து உங்களுக்கு ஏற்படும் நோய்களை குணமடையச் செய்ய சித்த வைத்தியத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சித்த வைத்தியம் சிறியவர் முதல் பெரியவர் வரை எடுத்துக் கொள்ளலாம். மாவட்ட அளவிலான சித்த மருத்துவத்துறை பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வையும் அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் சித்தா பிரிவு அனைத்து இடங்களிலும் சிறப்பு மருத்துவர்களைத் தலைமையாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேவையான மருந்துகளும் இருப்பிலுள்ளது. எனவே பொதுமக்கள் சித்த மருத்துவத்தை பயன்படுத்திட வேண்டுமேன  கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  ஜி.பாஸ்கரன்   தெரிவித்தார்.
      முன்னதாக சித்த மருத்துவ கண்காட்சியை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டதுடன் மருத்துவ பரிசோதனை பிரிவையையும் பார்வையிட்டார். சுமார் 1000-க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டதுடன் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றார்கள்.
       இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத், மருத்துவ இணை இயக்குநர் மரு.விஜயன் மதமடக்கி, துணை இயக்குநர் மரு.யசோதாமணி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு. பிரபாகரன், உதவி மருத்துவர்கள் மரு.காந்திநாதன், மரு.உதயசூரியன், மரு.சரவணன், மரு.பிரித்தி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து