முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

சனிக்கிழமை, 26 ஜனவரி 2019      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம், தேனியில் தேனி மாவட்ட கழக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் கே.ஜெ.பாலமணிமார்பன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேனி நகர்; கழக செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் மாணவரணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், முன்னாள் அரசவைக்கவிஞர் முத்துலிங்கம், கழக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன், தஞ்சை சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கழக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் பேசும்போது இந்தியாவில் 70 சதவிகிதம் பேர் பேசுகின்ற இந்தியை தேசிய மொழியாக ஆக்குவதில் என்ன தவறு இருக்கிறது என்று நேரு கேட்டபொழுது பேரறிஞர் அண்ணா அவர்கள் அதிகமாக இருக்கின்ற காக்கை கூட்டங்களுக்கு மத்தியில் மயிலை போன்று இருக்கின்ற தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்றார். தேனி, மதுரை உள்ளிட்ட  5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக தனது சொத்துக்களை எல்லாம் விற்று முல்லை பெரியார் அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு மணிமண்டபம் எழுப்பி,  தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக யார் நல்லது செய்தாலும் அவருக்கு உரிய மரியாதை, அங்கீகாரம் அளித்தவர் புரட்சித்தலைவி அம்மா என்றார்.
முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது மொழிக்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் போராட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற மொழிப் போரை நாடே திரும்பி பார்த்த வரலாற்று போராட்டமாகும். 1920ல் இருந்து 1936 வரை சென்னை மாகாணத்தை நீதிக்கட்சி தான் ஆண்டு வந்தது. பெண்கள் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் சட்டம் இயற்றியது உள்ளிட்ட நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும், மக்களிடம் நேரடி தொடர்பு இல்லாததால் 1937ம் ஆண்டு தேர்தலில் தோற்றது. தேர்தலில் வென்ற காங்கிரஸ்  இந்தியை கட்டாய பாடமாக கொண்டு வந்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றது. அதையடுத்து 1940ல் இந்தி கட்டாயப்பாடம் என்ற ஆணை ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தான் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த போராட்டம். 1965ம் ஆண்டு ஹிந்தி தான் ஆட்சி மொழி என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழகமெங்கும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. தமிழ் அறிஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இம்மொழிப்போரில் நடராஜன், தாளமுத்து,  அரங்கநாதன், சின்னச்சாமி, தண்டபாணி, முத்து உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். தமிழ் தமிழ் என்று பேசிய கருணாநிதி தமிழை விற்று வாழ்ந்தவர். இலங்கையில் இனப்படுகொலையை கண்டித்து இலங்கை தமிழர்களுக்காக தமிழக எம்.பிக்கள் 40 பேரும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிப்பு மட்டும் செய்துவிட்டு ராஜினாமா செய்யாமல் ஏமாற்றினார்களோ, இலங்கை தமிழர்களின் அழிவுக்கும், முல்லிவாய்க்கால் பிரச்னைக்கும் காரணமாக இருந்தாரோ அன்றே உலக தமிழர்கள்  திமுகவை ஒதுக்கி விட்டனர்.  ஆனால் எம்.ஜி.ஆர் தமிழுக்கென்று ஒரு தனி பல்கலைக்கழத்தை உருவாக்கினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக நலனுக்காக காவிரி பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்க சட்டபோராட்டம் நடத்தினார். அவருடைய மறைவுக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் மூலம் போராடியதில் தற்போது மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழுக்காக, தமிழர்களுக்காக போராடி வரும் நமது கழகம் தான் மொழிபோர் தியாகிகளுக்காக வீரவணக்கம் செலுத்த தகுதியானவர்கள் என்றும், நமது கழகத்தை தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள் என்று சிறப்புரையாற்றினார். மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடைராமர், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து