முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவில் அருகே இறச்சகுளத்தில் சம்பவம்: ஆசிரியைகள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி நிர்வாகி கைது - உதவி செய்த பேராசிரியைகள் இருவரும் கைது

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே பாரா மெடிக்கல் கல்லூரியில் ஆசிரியைகள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்

நாகர்கோவில் அருகே இறச்சகுளத்தில் ஜேக்கப் பாரா மெடிக்கல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் நிறுவனர் ரவி. இங்கு ஆசிரியைகள் உள்பட 10 பேர் பணிபுரிந்து வருகின்றனர். 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தது. மேலும் இங்கு பணிபுரியும் ஆசிரியைகளுக்கும், கல்லூரி நிறுவனர் ரவி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இக்கல்லூரியில் நாகர்கோவில் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்த ஆசிரியையை கல்லூரி நிறுவனர் ரவி, அடிக்கடி தனது அறைக்கு அழைத்து பேசுவார். 2 நாட்களுக்கு முன்பு இதுபோல நிறுவனர் ரவியின் அறைக்கு ஆசிரியை சென்றார். சிறிது நேரத்தில் நிறுவனர் அறையில் இருந்து ஆசிரியை அழுதபடி வெளியே ஓடி வந்தார். ஆசிரியை அழுதது பற்றி உடன் பணிபுரிவோர் கேட்டனர். அப்போது நிறுவனர் ரவி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியை கூறினார். இதுபற்றி அவர், பெற்றோரிடமும் தெரிவித்தார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரிக்கு சென்று நிறுவனர் ரவியிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி, மோதல் ஏற்பட்டது.

இது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் சம்பவம் பற்றி விசாரித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட ஆசிரியையும் அழைத்து நடந்த சம்பவம் குறித்து கேட்டனர்.

அப்போது ஆசிரியை போலீசாரிடம் கூறியதாவது:-

கல்லூரி நிறுவனர் ரவி, அவரது அறைக்கு அடிக்கடி என்னை அழைத்து பேசுவார். அவரது பேச்சு எனக்கு பிடிக்கவில்லை. இதனால் நான், அங்கிருந்து வெளியேறி விட்டேன். எனது அறைக்கு வந்த பின்பு கல்லூரி பேராசிரியைகள் நளினி, கலா ஆகியோர் என்னை சமரசம் செய்ய வந்தனர். பின்னர் நிறுவனர் ரவி, என்னை அழைப்பதாக கூறி அவரது அறைக்கு மீண்டும் என்னை அனுப்பி வைத்தனர். அங்கு சென்றதும் நிறுவனர் ரவி, என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். இதையடுத்து நான் வெளியே ஓடி வந்தேன்.

இந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் கல்லூரிக்கு சென்று நிறுவனர் ரவியை சந்தித்து விளக்கம் கேட்டனர். அவர், எங்களை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆசிரியை கூறினார்.

இதையடுத்து நாகர்கோவில் ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் புகார் உறுதி செய்யப்பட்டது. மேலும் முரண்டு பிடிக்கும் மாணவிகளை கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்து விடுவதாக மிரட்டி அவர்களை பணிய வைத்ததும் தெரிய வந்தது. கல்லூரி நிறுவனர் ரவிக்கு, பேராசிரியைகள் நளினி, கலா ஆகியோர் உடந்தையாக இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கல்லூரி நிறுவனர் ரவி, பேராசிரியைகள் நளினி, கலா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ரவியால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்க முன்வந்தால் அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து