முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் _ துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

புதன்கிழமை, 22 மே 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் மக்களவை மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான வினய் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 17வது மக்களவைக்கான தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மே.19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. நாட்டின் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தவிர 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதுதவிர தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மிகப்பெரிய ஆளுமையாக இருந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு பின்னர் நடக்கும் தேர்தல் என்பதால் முடிவுகள் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா மட்டுமின்றி உலகமே இந்த தேர்தல் முடிவை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
திண்டுக்கல் மக்களவை மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணிக்கைக்கு சில மணி நேரமே உள்ளதால் அதன் முடிவுகளை எதிர்நோக்கி வேட்பாளர்கள் திக் திக் அச்சத்தில் உள்ளனர். மேலும் நிலக்கோட்டை, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் பழனி கோவிலுக்கு வந்து மனமுருகி வேண்டி சென்றனர். மேலும் சில வேட்பாளர்களும் பழனிக்கு வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஆனால் சுயேட்சை வேட்பாளர்களோ வாக்கு எண்ணிக்கையில் எவ்வித ஆர்வமும் காட்டாமல் உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் வினய் தெரிவித்துள்ளார். இதனால் இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்த வேட்பாளர்கள் இன்று காலை வாக்கு எண்ணும் மையத்திற்கு வரத்தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக தேர்தல் முடிவுகள் 3 அல்லது 4 மணி நேரத்தில் கிட்டத்தட்ட தெரிந்து விடும் நிலையில் இந்த தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதில் மேலும் தாமதம் ஏற்படும் என்பதால் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து