மேட்டூர் அணையில் இருந்து கரூர் வரை ஏரிகள், குளங்களை உபரி நீரால் நிரப்ப ரூ. 25 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      தமிழகம்
cm edpadi visit mettur dam 2019 08 13

சென்னை : மேட்டூர் அணையிலிருந்து கரூர் வரையிலுள்ள ஏரிகள், குளங்களை உபரிநீர் மூலமாக நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி சேலம், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டத்தை அரசு நிறைவேற்றியே தீரும். அதை நிறைவேற்றுகின்ற பொழுது, நமக்கு தேவையான நீர் கிடைக்கும். 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கி விட்டது என்ற செய்தியையும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டம் கரூரில் இணைக்கப்படும். அதற்கு மேல் உள்ள பகுதிகள் அனைத்தும் நீரேற்று மூலமாக இரண்டு பகுதியில் இருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தேவையான நீரை கொடுப்பதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். இப்பொழுதுகூட, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, சேலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 100 ஏரிகளுக்கு ரூபாய் 565 கோடி செலவில் மேட்டூர் உபரிநீரை தேக்கி வைக்க இருக்கிறோம்.

அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் , கருப்பணன் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ராஜா ஆகியோர் தங்களுடைய வறட்சியான பகுதியில் பருவமழை காலங்களில் மேட்டூரிலிருந்து வெளியேறுகின்ற உபரிநீரை எங்கள் பகுதிக்கும் திருப்பி விட வேண்டும். எங்கள் பகுதியில் இருக்கின்ற ஏரிகளிலும் நிரப்ப வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அரசு அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டம் வருகின்ற பொழுது, அந்தப் பகுதி மக்களுக்கும், ஈரோடு மாவட்டத்திலிருக்கின்ற பாசனம் பெறாத அந்த ஏரிகளுக்கும் மேட்டூர் உபரி நீரை தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்படும் என்ற செய்தியையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற கெங்கவள்ளி, ஆத்தூர், ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் இருக்கின்ற மக்களுக்கும் மேட்டூர் தண்ணீர் ஏற்றப்பட்டு அங்கு இருக்கின்ற ஏரிகள், குளங்கள் நிரப்பப்படும். அதே போல, மேட்டூர் அணையிலிருந்து கரூர் வரையிலுள்ள இரண்டு பகுதியிலும் இருக்கின்ற விவசாயப் பெருங்குடி மக்கள் பயன்பெறுகின்ற விதமாக அங்கே இருக்கின்ற ஏரிகள், குளங்கள் முழுவதும் நிரப்புகின்ற விதமாக உபரிநீரை மூலமாக நிரப்பப்படும் என்ற செய்தியையும், இதற்காக 25 ஆயிரம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, ஒரு சொட்டுநீர் கூட வீணாகக் கூடாது என்ற அடிப்படையில் எங்களுடைய அரசால் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக 2 ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்கள், 3 ஓய்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளர்களை நியமித்து பருவமழை காலங்களில் எங்கெங்கெல்லாம் மழைநீர் வீணாக கடலில் கலக்கின்றதோ அதையெல்லாம் கணக்கிட்டு, அந்த தண்ணீரை எப்படி பயன்படுத்துவது என்று திட்டம் தீட்டி எங்களுக்கு அறிக்கையாக தர இருக்கின்றார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில், அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும். விவசாயிகள் இருக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சொட்டுநீர் பாசனத் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். சொட்டுநீர் பாசனத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்த அரசு எங்களுடைய அரசு. ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருந்தால் 100 சதவீதம் மானியமும், அதற்கு மேல் எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும், 75 சதவீதம் மானியத்தில் சொட்டுநீர் பாசனக் கருவிகளை விவசாயிகளுக்குத் தருகிறோம். எனவே, நிலத்தடி நீர் குறைவாக இருந்தால் கூட, சொட்டுநீர் பாசனத்தின் மூலமாக வேளாண் பணிகளை மேற்கொள்கின்ற பொழுது, விவசாயிகள் குறைந்த தண்ணீரில் அதிக விளைச்சலை பெறக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்திருக்கின்றோம். வேளாண் பெருமக்களுக்குத் தேவையான டிராக்டர், வேளாண் கருவிகள், விதைகள், உரம் மானிய விலையில் கொடுக்கின்றோம். வட்டியில்லாத பயிர்க்கடன் கொடுக்கிறோம். இவ்வாறு அனைத்தையும் முழுமையாக கொடுக்கின்ற ஒரே அரசு அம்மாவின் அரசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிற்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக சேலம் மாவட்டத்தில் ஓமலூரிலிருந்து தாரமங்கலம் செல்கின்ற வழியில் மிகப் பெரிய மார்க்கெட் ஏற்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களை இங்கு ஆன்-லைனில் விற்கலாம். விலை கட்டுப்படியாகாத சமயங்களில் அங்கேயுள்ள குளிர்பதனக் கிடங்குகளில் வைத்து பாதுகாத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு மாதத்திற்கு வாடகை ஏதும் கிடையாது. அங்கே விவசாயிகள், வியாபாரிகள் குளிப்பதற்கு, தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்ய இருக்கிறோம். அதே போல, அவ்விடத்திலேயே பணம் கிடைப்பதற்கு வசதியும் செய்ய இருக்கின்றோம். இவையெல்லாம் விவசாயிகளின் நலனுக்காக எங்களுடைய அரசால் செய்யப்படுகின்றது. இங்கு மட்டுமல்லாமல், பரிட்சார்த்த முறையில் தமிழ்நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமென்பதற்காக ஆங்காங்கே இந்தத் திட்டத்தை செயலாக்கத்தில் எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகள், நான்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையினை ஏற்று, மேட்டூர் கிழக்கு கரை, மேற்கு கரை கால்வாய்கள் முழுவதையும், மேட்டூர் அணையிலிருந்து அது முடிகின்ற எல்லை வரை கான்கிரீட் கால்வாயாக அமைக்கும் திட்டம் ரூ. 600 கோடியில் அரசு உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் பாசனத்திற்குப் பயன்படும் வகையில் இந்தத் திட்டத்தை அம்மாவின் அரசு செய்து கொண்டிருக்கின்றது. இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் இது போன்று கான்கிரீட் கால்வாய்கள் உருவாக்கப்படும். டெல்டா பாசன கால்வாய்களையும் சீர் செய்வதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கேட்டுள்ளோம். அந்த அனுமதி கிடைத்தவுடன் டெல்டா பாசன கால்வாய்கள் அனைத்தும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 20 சதவிகிதம் தண்ணீர் வீணாகாமல் மிச்சப்படுவதோடு ஆண்டுதோறும் தூர்வாரும் நிலையும் மாறும்.

பொள்ளாச்சி பகுதியில் பரிட்சார்த்த முறையில் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசனம் மூலமாக சுமார் 7,500 ஏக்கர் நிலத்தை எடுத்து அதற்குத் தேவையான கருவிகளை அரசாங்கமே கொடுத்து அந்தத் திட்டத்தை உருவாக்க இருக்கின்றது. ஒரு ஏக்கருக்கு பயன்படும் நீர் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் பாய்ச்சுகின்ற பொழுது கிட்டத்தட்ட 7 ஏக்கர் நிலத்திற்கு பயன்படுகின்றது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அம்மாவின் அரசு திட்டமிட்டிருக்கின்றது. இவைகளெல்லாம், குறுகிய காலத்தில், நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து உங்களுக்காக செய்யப்பட்ட நல்ல திட்டங்கள் என்பதை தெரிவித்து ஜெயலலிதா திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் விவசாயிகளிடம் கொண்டு சேர்த்திருக்கின்றோம். பண்ணைத் திட்டத்தையும் செயல்படுத்தியிருக்கின்றோம். இவ்வாறு, விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வாரி, வாரி அரசு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்து தற்போது 101 அடியை எட்டி, 66 டி.எம்.சி. தண்ணீரோடு இருக்கின்ற மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசன விவசாயிகளின் மனம் குளிர தண்ணீர் திறந்து விட்டிருக்கின்றோம்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து