வாஷிங்டன் : இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்த அவர், அதையடுத்து இம்ரான் கானுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதிபர் டிரம்ப் உடனான 30 நிமிட உரையாடலின் போது, பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலின் முக்கியத்துவத்தையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை விதிவிலக்கின்றி ஒழிப்பதன் அவசியத்தையும் பிரதமர் மோடி எடுத்துக் கூறினார்.
இம்ரான் கானுடனான தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஜம்மு - காஷ்மீரின் நிலைமை குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலை குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிலை தொடராமல் இருக்க உடனடி பேச்சுவார்த்தை குறித்த அவசியத்தை வலியுறுத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அதிபர் டிரம்ப், எனது இரண்டு நல்ல நண்பர்களான இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரிடம் வர்த்தகம் தொடர்பாகவும் மிக முக்கியமாக காஷ்மீரில் பதற்றத்தை குறைப்பது தொடர்பாகவும் பேசினேன். ஒரு கடினமான சூழ்நிலை, ஆனால் நல்ல உரையாடல்கள் என்று பதிவிட்டுள்ளார்.