விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Temple Terrorist 2019 08 23

விநாயகர் சதுர்த்தி மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இருந்து தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை வெளியானதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல நகரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் எண்ணத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தியாகும். ஆனால் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த ஒரு வார காலமும் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். போலீஸ் பாதுகாப்புடன் பூஜை நடத்தப்பட்டு கடைசி நாளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். இப்படி கோலாகலமாக நடைபெறும் விழாவை சீர்குலைப்பதற்காகவும், வேளாங்கண்ணி திருவிழாவை சீர்குலைப்பதற்காகவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீவிரவாதிகள் இலங்கை வழியாகவே தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன் அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கையில்தான் மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சந்தேகத்திற்கு இடமாக 6 பேர் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாக தெரிகிறது. உஷாராக இருங்கள் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இந்த எச்சரிக்கை கடிதம் வந்துள்ளது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

உளவுப் பிரிவு எச்சரிக்கையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கூடுதல் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் ஐ.ஜி.க்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்நிலையில் உள்ளனர். குறிப்பாக கோவை நகருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல் என வந்த தகவலையடுத்து கோவையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கோவையில் உள்ள ஆலயங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநில போலீசாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள பதிவு வாகனங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. கேரள எல்லையிலும் தீவிர சோதனையை போலீசார் நடத்தினர்.

இதே போல் சென்னை நகரிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமை செயலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஆண்டாள் கோவிலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுருக்கமாக சொன்னால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.

மேட்டூர் அணையில் வெடிகுண்டுகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய  போலீசார் அங்கு, அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். இதே போல திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வாகன சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்டறிய கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தளங்கள், விளையாட்டு மைதானங்கள் என ஒன்றுவிடாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் மக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வணிக வளாகங்கள், விடுதிகள் ஒன்றையும் போலீசார் விட்டு வைக்கவில்லை. கோவையில் உச்சக்கட்ட உஷார்நிலையில் போலீசார் வைக்கப்பட்டுள்ளனர். இதே போல் மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமான அனைத்து இடங்களிலும் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கருதப்படும் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் பாரிமுனை, மண்ணடி, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. இப்போதும் அந்த பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து