முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

27 கைத்தறி நெசவாளர்களுக்கு மாநில அளவில் விருது 7 லட்சம் ரூபாய் காசோலைகள்: சான்றிதழ்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 27 கைத்தறி நெசவாளர்களுக்கு, மாநில அளவில் சிறந்த நெசவாளர் விருது (பட்டு மற்றும் பருத்தி), சிறந்த வடிவமைப்பாளர் விருது, திறன்மிகு நெசவாளர்கள் விருது மற்றும் விருதுகளுக்குரிய பரிசுத் தொகையான 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் சான்றிதழ்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

2019-20ஆம் ஆண்டிற்கு மாநில அளவில் அதிக உற்பத்தியும், விற்பனையும் பெற்றுத் தந்த பட்டு ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளருக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை சேலம் சரகம், ஜே.ஒ. கொண்டலாம்பட்டி பருத்தி மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் கே.சுப்ரமணி என்பவருக்கும், பருத்தி இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளருக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை பரமக்குடி சரகம், கலைமகள் பருத்தி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் கே.கே.பாண்டுரங்கன் என்பவருக்கும், இரண்டாம் பரிசாக தலா 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை ஆர்.பாபு (பட்டு ரகம்) மற்றும் எஸ்.மல்லிகா (பருத்தி ரகம்) ஆகியோருக்கும், மூன்றாம் பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை .எஸ்.கே. சரவணன் (பட்டு ரகம்) மற்றும் ஆர்.ராதாமணி (பருத்தி ரகம்) ஆகியோருக்கும், சிறந்த வடிவமைப்பாளருக்கான முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கும்பகோணம் சரகம், திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க வடிவமைப்பாளர் எம்.கார்த்திகேயன் என்பவருக்கும், சிறந்த வடிவமைப்பு மற்றும் தரத்துடன் கூடிய கைத்தறி ரகங்களை நெசவு செய்தமைக்காக, 20 திறன்மிகு நெசவாளர்களுக்கு முதல் பரிசாக தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் என மொத்தம்  27 கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளுக்குரிய பரிசுத் தொகையான 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கி கௌரவித்தார்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் திருச்செங்கோடு சரக உதவி இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்தார். அண்ணா கூட்டுறவு நூற்பாலை, பாரதி கூட்டுறவு நூற்பாலை, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ஆகிய நூற்பாலைகளில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான நிரந்தர பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தை சார்ந்த 5 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், ஓட்டுநர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  தங்கமணி, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் சரோஜா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், தலைமைச் செயலாளர் சண்முகம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் கருணாகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து