முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் 15,16-ம் தேதிகளில் மனுக்களை பெறலாம் கட்டண விவரங்களையும் அறிவித்தது தலைமை கழகம்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 15, 16-ம் தேதிகளில் மாவட்டத் தலைநகரங்களில் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு பதவிக்கான கட்டண விவரங்களையும் கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

மேயர் பதவிக்கு கட்டணம்

மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிடுவோர் 25 ஆயிரம் ரூபாயும், மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோர் 5 ஆயிரம் ரூபாயும் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். நகரமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் 10 ஆயிரம் ரூபாயும், நகரமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோர் 2 ஆயிரத்து 500 ரூபாயும் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு...

பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் ஐயாயிரம் ரூபாயும், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோர் ஆயிரத்து 500 ரூபாயும் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோர் ஐயாயிரம் ரூபாயும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோர் மூவாயிரம் ரூபாயும் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

15, 16-ம் தேதிகளில் ...

வரும் 15, 16 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுப் பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், முத்தமிழ் செல்வன் ஆகியோர் மகத்தான வெற்றி பெற்றனர். இந்த வெற்றி அ.தி.மு.க.வுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில்தான் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இன்னும் 15 நாளில் வெளியாகும் என்று ஏற்கனவே துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நாங்குநேரி வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் அறிவித்திருந்தார். அதன்படி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மேலும் இந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று தோழமை கட்சிகள் ஏற்கனவே அறிவித்து விட்டன. இந்த சூழ்நிலையில்தான் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க. மேலிடம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து