2021-ல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதையே ரஜினி கூறுகிறார்: மறைமுக தேர்தலை கொண்டு வந்ததே தி.மு.க.தான் - தூத்துக்குடியில் முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2019      தமிழகம்
cm edapadi accusation 2019 11 21

சென்னை : 2021-ம் ஆண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் என்றும் 2021-ம் ஆண்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் மறைமுக தேர்தலை கொண்டு வந்ததே தி.மு.க.தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

முன்னதாக கோவாவில் இருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 100க்கு 100 சதவீத தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்தப் போகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த தென்காசி தமிழகத்தின் 34-வது மாவட்டமாக இன்று (22-ம் தேதி) உதயமாகிறது. அதனை துவங்கி வைக்க வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்திறங்கினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

எந்த அடிப்படையில் 2021-ம் ஆண்டில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை. ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூற முடியும். 2021-ம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம். 2021-ம் ஆண்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், மறைமுக தேர்தல் என்ற சட்டத்தை கொண்டு வந்ததே தி.மு.க. தான் அதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பது விந்தையாக உள்ளது. உள்ளாட்சி அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் 31-06-2006 அன்று உள்ளாட்சி தேர்தல் மறைமுகமாக நடத்தப்படும் என அறிவித்தார், அசாம், குஜராத் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்று தான் நடத்தப்படுகிறது என்று கூறி தீர்மானம் நிறைவேற்றினார். நேரடி தேர்தல் நடத்தப்பட்டதால் விழுப்புரம் உள்ளிட்ட சில நகராட்சிகள் செயல்படாமலே இருந்தது என்பதை சுட்டிக்காட்டினார். நேரடி தேர்தலை கொண்டு வந்ததும் தி.மு.க.தான். 2006-ல் மறைமுக தேர்தல் என கொண்டு வந்ததும் தி.மு.க. தான். ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சிகளில் எப்போதும் மறைமுக தேர்தல் தான் நடத்தப்படுகிறது. மறைமுக தேர்தல் என ஸ்டாலின் சொன்னால் சரி? நாங்கள் சொன்னால் தவறா? மறைமுக தேர்தல் முறைக்கு பா.ஜ.க.வின் பொன் ரதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அந்தந்த கால கட்டத்தில் உள்ள அரசியல் சூழலுக்கு ஏற்ப உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுக தேர்தல் பற்றி முடிவு எடுக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கணக்கெடுப்பு பணிகள் முடிந்தபிறகு வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 2000 வழங்கப்படும். 33 ஆண்டுகளாக மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று தென்காசியை தனி மாவட்டமாக்கியுள்ளோம். தவறுதலாக சர்க்கரை ரேசன் கார்டுகள் பெற்றவர்கள் அரிசி ரேசன் கார்டுகள் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பேட்டியின் போது அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, ஆவின் தலைவர் என் சின்னத்துரை, மாவட்ட செயலாளர் சண்முநகாதன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் உட்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து