சென்னை : கேரளா மற்றும் தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்
பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தருமபுரி, சேலம், நாமக்கல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரிலும், நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலும் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனிடையே அக்டோபர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் 43 செ.மீ மழை பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.