தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2020      ஆன்மிகம்
Thanjavur-Kumpapisekam 2020 02 05

தஞ்சை பெரிய கோவில் மகா குடமுழுக்கு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் ஓம் நமச்சிவாய கோஷம் அதிரசெய்தது.

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் (நேற்று)கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த 8 மாதங்களாக நடைபெற்றன. கோபுரங்கள் சீரமைப்பு, சாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான குடமுழுக்கு திருப்பணிகள் மும்முரமாக நடந்தன. கடந்த ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. இந்த முறை யாகசாலை கோவில் வளாகத்தில் வைக்காமல் பாதுகாப்பு கருதி அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டது. அங்கு 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தையொட்டி நந்தி மண்டபம் முன்பு இருந்த பழைய கொடிமரம் அகற்றப்பட்டு சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 அடி உயர தேக்கு மரத்தில் புதிய கொடிமரம் தயார் செய்யப்பட்டு கடந்த 27-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் கலசங்களுக்கு தங்க முலாம் பூசப்பட்டு கலசங்கள் அனைத்தும் தொன்மை மாறாமல் பொருத்தப்பட்டன. கலசங்களுக்கு ஊற்றுவதற்காக கங்கை, காவிரி, யமுனா உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் யானை மீது வைக்கப்பட்டு ஊர்வலமாக பெரிய கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழாக்கள் கடந்த 27-ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. முதல் கால யாகசாலை பூஜை கடந்த 1-ம் தேதி தொடங்கி 2 மற்றும் 3- ம் தேதிகளில் 2, 3, 4 மற்றும் 5–-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை 6-–ம் கால யாகசாலை பூஜைகளும், மாலையில் 7-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தஞ்சைக்கு வரத் தொடங்கினர். லட்சகணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண குவிந்ததால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டு மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.

அதை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 8-ம் கால யாக பூஜையுடன் தொடங்கியது. 335 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் கலந்து கொண்டு ஹோமம் நடத்தினர்.பின்னர் ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பர்ஸாஹூதி நடைபெற்றது. காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரீதி நடந்தது. இதனை பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்தனர். காலை 7 மணி முதல் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண கோவிலுக்குள் வரிசையாக அனுப்பப்பட்டனர். அவர்களை போலீசார் கடும் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட 705 கலசங்களை காலை 7.30 மணியளவில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், முக்கிய பிரமுகர்கள் யாகசாலையில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.அதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் தொடங்க தயாரானது. 9.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் பெருவுடையார் சன்னதியான 216 அடி உயர ராஜ கோபுரத்தின் மீது புனித நீருடன் ஏறினர். பாதுகாப்பு கருதி அவர்களுடன் 2 போலீசார் சென்றனர். அப்போது மேள தாளங்கள் முழக்கப்பட்டது.ஒவ்வொரு படியாக சிவாச்சாரியார்கள் ஏறிச் சென்றபோது பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை விண்ணை முட்டும் அளவுக்கு எழுப்பினர். இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ராஜ கோபுரகலசத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். இதேபோல் மற்ற சன்னதி கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் நடைபெற்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து பெரிய கோவிலில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் அதனை தலைவணங்கி ஏற்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வீட்டில் இருந்தபடியே கோடிக்கணக்கான பக்தர்கள் டி.வி.யில் நேரலையில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பார்த்தனர். இதையடுத்து பெரிய நாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் சோ. ராமசந்திரன், கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்குடமுழுக்கு விழா குழு தலைவர் துரை.திருஞானம், உறுப்பினர்கள் பண்டரிநாதன், காந்தி, புண்ணியமூர்த்தி, சரவணன், அறிவுடைநம்பி, சாவித்ரி கோபால், பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து