பட்ஜெட் உரையை 3.20 மணி நேரம் படித்த ஓ.பி.எஸ்.

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
OPS 2020 02 14

தமிழக சட்டசபையில் நேற்று துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2020 - 21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை 3 மணி 20 நிமிட நேரம் படித்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து படித்தார். காலை 10 மணிக்கு சட்டசபை துவங்கியது. சபாநாயகர் திருக்குறனை படித்து முடித்ததும், துணை முதல்வர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து படிக்க தொடங்கினார். காலை 10 மணிக்கு படிக்க துவங்கிய அவர் மதியம் 1.20 மணிக்கு தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.  பட்ஜெட் மொத்தம் 113 பக்கங்களை கொண்டதாக இருந்தது. பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் படித்து முடித்ததும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். பட்ஜெட் உரை படித்து முடிந்ததும் சபையை 17-ம் தேதிக்கு சபாநாயகர் தனபால் ஒத்தி வைத்தார்.

சட்டசபைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக காலை 9.57 மணிக்கு வந்தனர்.  ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் புத்தகத்தை சிறிய சூட்கேசில் வைத்து கொண்டு வந்தார். இருவரும் சபைக்குள் வந்ததும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று மேஜையை தட்டி பலத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10–வது பட்ஜெட் இதுவாகும்.

ஏற்கனவே கடந்த 9 முறை இவர் நிதியமைச்சராக இருந்து தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தமிழக பட்ஜெட்டை அதிக முறை தாக்கல் செய்தவர் என்ற பெருமை துணை முதல்வரையே சாரும். பட்ஜெட் தாள் அடங்கிய பெட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் அச்சிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து