இந்தியா - அமெரிக்கா இடையே இன்று ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்து- அகமதாபாத்தில் அதிபர் டிரம்ப் தகவல்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      இந்தியா
trump contract 2020 02 24

அகமதாபாத் : அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா இடையே இன்று ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தெரிவித்தார்.

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் சென்ற அதிபர் டிரம்பிறகு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் மொதேரா மைதானத்தின் நுழைவு வாயிலில் அதிபர் டிரம்பிற்கு ஒட்டகப் படை வரவேற்பும்  அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி அரங்க மேடையில் அமெரிக்க அதிபரும் பிரதமர் மோடியும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

நமஸ்தே என்று கூறி தனது உரையை துவக்கிய டிரம்ப் பேசியதாவது, இந்திய மக்களை அமெரிக்கா விரும்புகிறது. இந்திய மக்களை அமெரிக்கா மதிக்கிறது. இந்திய மக்களை காண 8000 கி.மீ. பயணித்து வந்துள்ளோம். அமெரிக்கா எப்போதுமே இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாக இருக்கும். எங்களை வரவேற்க இந்த மைதானத்தில் 1.25 லட்சம் பேர் கூடியுள்ளனர். இந்தியா எங்களுக்கு வழங்கிய விருந்தோம்பலை எப்போதும் மறக்க முடியாது. அமெரிக்கர்களின் மனதில் இன்று முதல் இந்தியா சிறப்பான இடம் பிடித்து விட்டது. டீ விற்பனையாளராக இருந்து நாட்டின் தலைவராகியுள்ளார் மோடி. மோடியை அனைவரும் விரும்புவார்கள் என்பது எனக்கு தெரியும். மோடியை அவ்வளவு சீக்கிரமாக கணிக்க முடியாது, அவர் கடினமானவர். இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி.

விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர். இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தியாவின் ஜனநாயகம் ஆச்சரியப்பட வைக்கும் வகையை சேர்ந்தது. இந்திய வரலாற்றில் மோடி தலைமையில் அனைத்து கிராமங்களும் மின் வசதியை பெற்றுள்ளது. இந்தியா ஒரு பொருளதார சக்தியாக உலக அரங்கில் உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஏழ்மை விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரமான ஜனநாயக நாடாக திகழ்ந்து வருகிறது. மோடி தலைமையில் இந்தியா உலக அரங்கில் முன்னணி நாடாகியுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகளுக்கு ஒரு உதாரணம். இந்தி சினிமாக்கள் மிகவும் கற்பனைத்தன்மையுடன் எடுக்கப்படுகின்றன. கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தில் இந்தியா - அமெரிக்கா தனிச்சிறப்பு நாடுகள். விராட் கோலி உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்தி சினிமாத்துறை உலக அரங்கில் செழிப்பான ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் இந்தி சினிமாக்கள் விரும்பி பார்க்கப்படுகின்றன. இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என பல மதத்தினர் ஒற்றுமையாக வசிக்கின்றனர். இந்திய மக்களின் ஒற்றுமை அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க கூடியது. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு சென்று வந்ததை பெருமையாக கருதுகிறோம். அமெரிக்க வளர்சிக்கு பங்களிப்பு அளித்து வரும் இந்திய வம்சாவழியினருக்கு நன்றி. இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து பேச உள்ளேன். இந்திய மக்களுக்காக இரவு - பகலாக மோடி உழைத்து வருகிறார். 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் நாளை(இன்று) கையெழுத்தாகிறது. தனிச்சிறப்பு வாய்ந்த ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்கு விற்க உள்ளோம். விண்வெளி திட்டங்களிலும் அமெரிக்கா ஒத்துழைப்புடன் செயல்படும். அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவ கூட்டாளியாக இந்தியா இருக்க வேண்டும். இந்தியா - அமெரிக்கா நாடுகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறோம். ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவன் பாக்தாதியை அமெரிக்கா அழித்து விட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே அமெரிக்கா வருவதற்கு கட்டுப்பாடுகள் அதிகம். தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு இந்தியா நல்ல தலைமையை கொண்டுள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் முனைப்பு காட்டி வருகிறேன். பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

டைகர் டிரயல் என்ற பெயரில், இரு நாடுகளின் ராணுவ கூட்டுப்பயிற்சி நடைபெறும். ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கப்பல் கட்டுவதில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு தரப்படும். மிகச்சிறப்பான வர்த்தக ஒப்பந்தம் இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாக உள்ளது. இந்தியா - அமெரிக்காவிற்கு நன்மை தரும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் இருக்கும். இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு மிகச்சிறந்த சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டங்கள் மிகச்சிறப்பு வாய்ந்தவை. இந்தியா மிகவும் செழுமையான தேசமாக திகழ்கிறது. ஒளிமயமான எதிர்காலத்திற்கு மக்கள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று கூறி தனது உரையை முடித்தார் டிரம்ப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து