முதல் முறையாக ஒரே தவணையில் பூண்டி ஏரிக்கு 6 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வந்தது

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020      தமிழகம்
Pondi Lake 2020 02 28

கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்துள்ளது. இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடவேண்டும். கடந்த செப்டம்பர் 28-ம் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை வரை 6.009 டிஎம்சி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்துள்ளது. ஒரே தவணையில் 6.009 டி.எம்.சி. வந்து சேர்ந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

1996-ல் முதன் முதலாக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த 25 ஆண்டுகளில் 2011-ம் ஆண்டு இரு தவணைகளையும் சேர்த்து அதிகபட்சமாக 7.976 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்து இருந்தது. கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். தற்போது 34 டி.எம்.சி. தண்ணீர் அங்கு இருப்பு உள்ளது. இதனால் பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்க வாயப்பு உள்ளது. இது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 29.35 அடியாக பதிவானது. 1593 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 453 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது. கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 226 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து