தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு தனி சிகிச்சை மருத்துவமனைகள் உருவாக்கப்படும்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      தமிழகம்
vijayabaskar 2020 03 24

தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு தனி சிகிச்சை மருத்துவமனைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் நாடு முழுவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 3,018 வென்டிலேட்டர்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் கோரனாவால் 74 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் குணடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது. ஒருபுறம் கொரோனா தடுப்புப்பணிகள், மறுபுறம் அதை எதிர்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு, மத்திய குழுவினர் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தி வருகிறோம். உலக சுகாதார நிறுவனம் நம்முடைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு  வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு தனி சிகிச்சை மருத்துவமனைகள் உருவாக்கப்படும். ராஜீவ் காந்தி, ஸ்டான்லி மருத்துவமனைகளிலும் கொரோனா தனிப்பிரிவுகள் ஏற்படுத்தப்படும். அரசு ஸ்டான்லி மருத்துவனையில் கொரோனா பரிசோதனை நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  நோயாளிகளுக்கு மனஉறுதியை கொடுப்பதற்கான ஆலோசனையை உளவியல் மருத்துவர்கள் வழங்குகிறார்கள். தமிழகத்தில் எந்த நோயாளியும் வெண்டிலேட்டர் கருவியில் வைக்கவில்லை. கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 மாத குழந்தை நலமாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து