முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா சமூக பரவலாக மாறவில்லை : சேலத்தில் முதல்வர் எடப்பாடி பேட்டி

சனிக்கிழமை, 23 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : மத்திய அரசு போதுமான நிதியை படிப்படியாக அளித்து வருகிறது என்றும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி தெரிவித்தார். 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கொரோனா வைரஸ் நோய்தொற்று தடுப்புப் பணிகள், குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது, 

இந்த கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற அனைத்து அதிகாரிகளுக்கும், அரசின் சார்பாக பாராட்டுக்களையும், நன்றியையும் ஊடகம் மற்றம் பத்திரிகை வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கத்தைப் பொறுத்தவரைக்கும் நோய் பரவலை கட்டுப்படுத்தவதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டதலின்படி, அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். அதை தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- மத்திய அரசு போதுமான நிதியிதவியை தமிழக அரசிற்கு வழங்கியுள்ளதா?

பதில்:-  படிப்படியாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கேட்ட அளவிற்கு கிடைக்கவில்லை.

கேள்வி:- அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், சென்னையில் கொரோனா தொற்று தினந்தோறும் பரவி வருகிறது, சமூக பரவலாக மாறி இருப்பதாக நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா?  

பதில்:-  சமூகப் பரவல் கிடையாது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதி பகுதியில் சிறிய சிறிய வீடுகள், குறுகிய தெரு, நெரிசலான வீடுகளில் ஒரே வீட்டில் 7, 8 நபர்கள் வசிக்கின்றார்கள். அதில் தான் நாம் கண்டறிய வேண்டும். தொற்று அங்கேதான் அதிகமாக ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருந்திருந்தால், இந்த நோய்த் தொற்று அதிகம் ஏற்பட்டிருக்காது. அரசாங்கமும், ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வாயிலாகவும் ஏற்கனவே பலமுறை பாதுகாப்பாக இருக்க வேண்டும், முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், வீட்டிலிருக்கும் பொழுது யாருக்காவது நோய் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், வீடு மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அதை ஒரு சிலர் கடைபிடிக்க மாட்டேன் என்கிறார்கள். அதனால் தான் இந்தத் தொற்று அதிகமாக உள்ளது. சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரைக்கும், அனைத்து பகுதிகளிலும் அல்ல, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தான். ஏற்கனவே நோய் கண்டறியப்பட்ட பகுதி, கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்ற பகுதி, தடை செய்யப்பட்ட பகுதிகளில் தான் நோய் பரவல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும், அனைவரையும் கண்டறிந்து, பரிசோதனைக்குட்படுத்தி, நோய்  தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். 

கேள்வி:- 31-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்வுபடுத்தப்படுமா? 

பதில்:- மத்திய அரசு என்ன அறிவிப்பு வெளியிடுகின்றது என்று பார்க்கலாம். மருத்துவக் குழுவை விரைவில் சந்திக்கவிருக்கிறோம். மருத்துவக் குழுவினரின் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்பொழுது படிப்படியாக தளர்வு செய்து கொண்டிருக்கிறோம். வேளாண்மையில் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் விதிமுறைகளுக்குட்பட்டு பாதி அளவிற்கு திறந்து பணிகள் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும்,

தொழிற்சாலைகளில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்க வேண்டும், தொழிலாளர்கள் பயன்படுத்துகின்ற கழிப்பறைகளை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களை பணிகளில் அமர்த்தக் கூடாது போன்ற வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி அதனை பின்பற்ற வேண்டுமென்று தெரிவித்துள்ளோம். இவற்றையெல்லாம் பின்பற்றினால் நோய் பரவலை தடுக்க முடியும். அனைத்தையும் படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.

கேள்வி:-  கூட்டாட்சி முறையை கைவிட்டு விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் தெரிவித்திருக்கிறதே. மத்திய அரசை பொறுத்தவரைக்கும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

பதில்:-  எங்களைப் பொறுத்தவரை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசுக்கு மத்தியில் துணை நிற்க வேண்டும், அதுதான் எங்களுடைய எண்ணம். 

கேள்வி:- டெல்டா மாவட்டத்திற்கான நிவாரண உதவிகள் குறித்து...

பதில்:-  டெல்டா மாவட்டம் என்று எடுத்துக் கொண்டாலே தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் தான் வரும். அதில் சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம்  ஏக்கர் பாசனம் இருக்கிறது. அதில் இருக்கின்ற மக்களுக்கு நாம் நிவாரணம் கொடுக்கின்றோம். அதாவது, சம்பா தொகுப்பு, குறுவை தொகுப்பு எல்லாம் தண்ணீர் திறந்துவிடாத போது கொடுப்பார்கள். ஏன் என்றால், நிலத்தடி நீரை பயன்படுத்தி அந்த வேளாண் பணியை மேற்கொள்வார்கள். பயிர் நடவு செய்வார்கள். அதற்காக குறுவை தொகுப்பு கொடுப்பார்கள். ஆனால் இப்போது அப்படி அல்ல. இப்போது உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடுகின்றோம். ஜூன் 12-ம் தேதியே டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்காக தண்ணீர் திறக்கப்படும். 

கேள்வி:- கொரோனா பாதிப்பால் தமிழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளில் இருக்கிறது. அதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள். ஆனால் தமிழக அரசிற்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. தொகையை கூட மத்திய அரசு கொடுக்காமல்  இருக்கிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த பணம் கூட தராமல் இருப்பது பற்றி  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:-  தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே நெருக்கடியில் இருக்கிறது. வல்லரசு நாடுகளே நெருக்கடியில் இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளும் நெருக்கடியில் இருக்கிறது. எல்லா பகுதிகளிலுமே இன்றைக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தன் காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. இந்தியாவும் ஸ்தம்பித்து இருக்கிறது,

தமிழ்நாடும் ஸ்தம்பித்து போய் இருக்கிறது. ஆகவே, நமக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிதி கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். அது எல்லாம் வந்திருக்கிறது. ஆனால், ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களும், மார்ச் மாத்தில் 7 நாட்களும், இந்த காலக்கட்டத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்து விட்டது. சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று நிதித்துறை சொல்லியிருக்கிறது. அதை சரிகட்டுவதற்காக அரசு பல்வேறு வகையில் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல நடவடிக்கைகளை நாங்கள் அறிவிப்பில் கொடுத்திருக்கிறோம். ஆகவே, அரசாங்கம் பல்வேறு வகையில் இழப்பீட்டை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதே நேரத்தில், வளர்ச்சி பணிகள் எதுவும் குறையாமல் பார்த்துக் கொள்கிறோம். தமிழகத்தில் இருக்கின்ற வளர்ச்சிப் பணிகள் எதுவும் குறையாமல் இருந்தால் தான் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வளர்ச்சிப் பணிகள் இல்லையென்றால் வேலைவாய்ப்பு கிடைக்காது. வேலைவாய்ப்பு இருந்தால் தானே மக்களின் கையில் பணப்புழக்கம் இருக்கும். அதனால் அந்தப் பணியையும் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். எந்த விதத்திலும் வளர்ச்சிப் பணிகளில் குறையாமல் பார்த்துக் கொள்கிறோம். அதே போல இழப்பீட்டை எப்படி சரி செய்வது என்பதை கவனத்திலே கொண்டு அவற்றையும் சரி செய்து கொண்டிருக்கிறோம்.

கேள்வி:- இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் ஒரு தகவல் பரவி கொண்டு இருக்கிறதே?. 

பதில்:-  நான் ஏற்கனவே தெளிவுப்படுத்தியிருக்கிறேன்.  பாரதப் பிரதமருக்கு கடிதம் மூலமாக தெரிவித்தேன். எல்லா பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது, ஊடகத்திலும் வந்திருக்கிறது. இலவச மின்சாரம் என்பது எம்.ஜி.ஆரின் கனவுத்திட்டம். அம்மா  அதனை தொடர்ந்து நிறைவேற்றி வந்தார். எங்களுடைய அரசும் விவசாயிகளுடைய நலன் காக்கும் அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு தொடர்ந்து கிடைப்பதற்கு எங்களுடைய அரசு துணை நிற்கும். 

கேள்வி:- கல்வியாண்டு துவங்க இருக்கின்றதே...

பதில்:- கல்வியாண்டு துவங்கவில்லை. ஜூன் 15-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும். இந்தியாவில் 15 மாநிலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் முடிந்து, தேர்வுதாள்  திருத்தும் பணி நிறைவு பெற்று விட்டது.  ஆகவே நம்முடைய மாநிலத்திலே படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இன்றைக்கு பல்வேறு கோரிக்கையின் அடிப்படையில் ஜூன் 1-ம் தேதி தேர்வு நடைபெறுவதாக இருந்தது. மக்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூன் 15-ம் தேதிக்கு தேர்வினை பள்ளிக் கல்வித் துறை தள்ளி வைத்துள்ளது. அந்த தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.  மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அந்த தேர்வு நடைபெறும்.

கேள்வி:- கொரோனா இல்லாத மாவட்டங்களில் எல்லா கடைகளும் திறக்க வாய்ப்பு இருக்கிறதா?  இன்றைக்கு ஜவுளி கடைகள், நகைக்கடைகள் திறக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறார்களே?. 

பதில்:- எல்லா மாவட்டங்களிலும் திறப்பதற்கு அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஆனால் அண்டை மாநிலத்திலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வந்து கொண்டே இருக்கிறார்கள். இன்றைக்கு மகாராஷ்டிராவில் அதிகமாக இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. இன்றைக்கு எல்லோரும் வெளி மாநிலத்திலிருந்து வர வேண்டும் என்கிறார்கள்.

வெளிநாட்டிலிருந்தும் வர வேண்டும் என்கிறார்கள். நாங்களும் இந்த நோய் தடுப்புப் பணியை நிறுத்திய பிறகு வெளியில் இருந்து வந்தால் சரியாக இருக்கும்.   அவர்களை சமாளிக்கலாம். அவர்களுக்கு பரிசோதனை செய்து, யாருக்கு நோய் தொற்று உள்ளதோ அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தலாம் என எண்ணுகிறோம். ஆனால் தொடர்ந்து பொதுமக்களும், சில கட்சியை சேர்ந்தவர்களும் வெளிமாநிலத்திலிருந்து அழைத்து வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.  வெளிமாநிலத்திலிருந்து அழைத்து வருகின்ற போது, அதில் பலர் அந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தினந்தோறும் சுகாதாரத்துறை மூலமாக வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களில் எவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டிருக்கிறது என்ற விவரம் உங்களுக்கு தெரியும்.

இதுவரை 719 பேருக்கு கொரோனா நோய் ஏற்பட்டு இன்றைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலத்தில் வெளிமாநிலத்திலிருந்து, வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் தான் இன்றைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. அதனால் தான் எச்சரிக்கையோடு இருக்கிறோம். எல்லாவற்றையும்  திறந்து விட்டால், எல்லா மாநிலத்திலிருந்து இங்கே வந்தார்கள் என்றால், இந்த நோய் சமூக பரவலாகி விடும். கட்டுப்படுத்த முடியாது. அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்து, இந்த நோய் பரவலை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து