முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 900 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரி: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 6 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

மதுரையில் 900 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையை போன்று நோய்த்தொற்று அதிகம் உள்ள மாவட்டமாக மதுரை மாறியது. இருப்பினும் நாளுக்கு நாள் குணமடைபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. நோய்த்தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது.

இந்த நிலையில், மதுரையில் அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இது தவிர, ஆஸ்டின்பட்டி காசநோய் ஆஸ்பத்திரி, தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரி, வேளாண்மைக்கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி, திருமங்கலம் காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி ஆகிய இடங்களில் தனிமைப்படுத்துதல் முகாம்கள் உள்ளன. இதில் சுமார் 1500 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஸ்டின்பட்டி மற்றும் காமராஜர் பல்கலைக்கழகத்தில் தலா 200 படுக்கைகள் உள்ளன.

அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் உள்ள பழைய மகப்பேறு பிரிவில் கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நோய் தொற்று அறிகுறி இருந்தால் தங்கி சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகின்றனர். இருப்பினும் மதுரையை சுற்றியுள்ள தென்மாவட்டங்களில் இருந்து ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு நிறைய பேர் வருகை தருகின்றனர். இதனால், வடபழஞ்சியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான எல்காட் அலுவலகத்தில் தற்காலிக ஆஸ்பத்திரி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் 900 படுக்கைகள் கொண்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர்கள் மற்றும் ஐ.சி.யூ. என்று சொல்லப்படும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தற்காலிக ஆஸ்பத்திரியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இதனால், கூடுதலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதற்கான ஏற்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகம் ஆகியன செய்து வருகின்றன. நோயாளிகளுக்கான உணவை பொறுத்தமட்டில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மூலம் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படும் தென் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு இந்த தற்காலிக ஆஸ்பத்திரி பயனுள்ளதாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து