முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்ட பணிகள் விரைவில் துவக்கம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

நெல்லை : தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்ட பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

உலகில் உள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் வாழ்கின்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் தமிழகத்திலும் பரவியுள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு அம்மாவின் அரசு சிறப்புத் திட்டங்களை வகுத்து, அதன்மூலம் நோய்ப் பரவல் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இறப்பு சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. 

திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு, தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித தொய்வும் இல்லாமல் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப வேண்டும் என்று விரும்பியவர்களை, அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அரசின் செலவிலேயே ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இரண்டு மாவட்டங்களிலும் பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாவட்டங்களிலும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதிகமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டத்தை நான்காகக் பிரித்து செயலாக்கத்திற்கு எடுத்து, 4-வது திட்டத்திற்கு ரூபாய் 160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணியும் துவங்க இருக்கின்றன.

தற்போது நில எடுப்புப் பணி முடியும் தருவாயில் இருக்கின்ற சூழ்நிலையில்,  2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர  அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஆலங்குளம் மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்க உள்ளன. சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கும் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள இரண்டு கல்லூரிகளுக்கு தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 

அண்மையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை ரூபாய் 150 கோடி செலவில், ஏழு தளங்களுடன் 330 படுக்கை வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.  அதுமட்டுமல்லாமல், இந்த மருத்துவக் கல்லூரியில், ஏற்கனவே 150 மாணவர்கள் MBBS பயின்று வந்தார்கள்.

இப்பொழுது கூடுதலாக 100 இடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, தற்போது 250 மாணவர்கள் MBBS மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் நிலையை அம்மாவின் அரசு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.

அதேபோல, JICA நிதியுதவின் கீழ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூபாய் 10 கோடி செலவில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும், கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு  ரூபாய் 20.01  கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டுவதற்கும், அதிநவீன உபகரணங்கள் வாங்குவதற்கும், மொத்தம் ரூபாய் 51.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற முடியாத சூழலை மாற்றி, அரசு மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான கருவிகளை நிறுவி வருகிறோம்.

அந்த வகையில், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 21 கோடி செலவில் புற்றுநோய் சிசிச்சை அளிக்க அதிநவீன Linear Accelerator கருவி வெகு விரைவில் நிறுவப்படவுள்ளது.

இந்த வகையில் எல்லாம், மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அம்மாவின் அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து