முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள விமான விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கோழிக்கோடு : துபாயில் இருந்து 191 பயணிகளுடன் இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் பொழுது விபத்தில் சிக்கியது. மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், தரையிறங்கிய விமானம் ஓடு பாதையிலிருந்து விலகி, 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் 2 விமானிகள் (தலைமை விமானி தீபக் வசந்த், துணை விமானி அகிலேஷ் குமார்) உள்பட 19 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 5 உடல்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விமானி மற்றும் துணை விமானியின் உடல்கள் உள்பட 3 உடல்கள் ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

2 உடல்கள் பேபி மெமோரியல் மருத்துவமனையிலும், ஒரு உடல் கிரசென்ட் மருத்துவமனையிலும் உள்ளது. காயமடைந்தவர்களில் 19 பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

14 பேர் பேபி மெமோரியல் மற்றும் 33 பேர் ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையிலும் 4 பேர் மெய்த்ரா மருத்துவமனையிலும், 4 பேர் கிரெஸன்ட் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விமானத்தில் 10 சிறுவர்கள் உள்பட 184 பயணிகள், இரு விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்ததை ஏா் இந்தியா உறுதி செய்துள்ளது. இவா்களில் பெரும்பாலானோா் பெரிய அளவில் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனா்.

கொரோனா வைரஸ் பரவில் அச்சுறுத்தல் எதிரொலியாக மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் வெளிநாட்டு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு சார்பில் வந்தே பாரத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி துபாயில் சிக்கி தவித்த இந்தியர்களை அழைத்து வந்த விமானம் இது.  இந்த ஓடுபாதை விமானிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஓடுபாதை, இதில் தரையிறங்குவது சுலபமல்ல. வழக்கத்தை விட மிகவும் கடினமானது. 

விபத்து தொடா்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விபத்தின்போது விமானத்தில் தீப்பிடிக்கவில்லை. கோழிக்கோடு விமான நிலையத்தில் டேபிள் டாப் என்ற வகையில் மேடான பகுதியில் ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பாதையில் இருந்து விலகியதால் விமானம் பள்ளமான பகுதியில் சரிந்து விழுந்து விட்டது. காயமடைந்த பயணிகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் அளிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பற்றி விமான விபத்து புலனாய்வு துறை, மத்திய விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் மற்றும் விமான பாதுகாப்பு துறை ஆகியவற்றின் அதிகாரிகள் கரிப்பூர் விமான நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதேபோல கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல்வர் பினராய் விஜயன் ஆகியோரும் விமான விபத்து நடந்த கரிப்பூருக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

துபாயில் உள்ள இந்திய தூதரகம் சாா்பில் விபத்து குறித்து அறிய +97156 5463903, +971543090572, +971543090572, +971543090575 ஆகிய அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோழிக்கோடு விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு விமான நிலையம் வரும் அனைத்து விமானங்களும் கண்ணூர் மற்றும் கொச்சின் விமான நிலையங்களில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு விமான விபத்து நடந்த கரிப்பூர் விமானநிலையம் பாதுகாப்பாக இல்லை என விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை கமிட்டி உறுப்பினர் மோகன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பின்மை குறித்து அவர் 9 வருடங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார். மங்களூருவில் ஏற்பட்ட விமான விபத்து சமயத்தில் இது பற்றி அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அப்போது அது கண்டு கொள்ளப்பட வில்லை என தெரிவித்துள்ளார்.

தற்போது விமான விபத்து ஏற்பட்டுள்ள கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையம் மலை மீது அமைந்துள்ள டேபிள் டாப் விமான நிலையம். இதன் ஓடு பாதையின் முடிவில் போதுமான நீட்டிக்கப்பட்ட பகுதி இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக 240 மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் கரிப்பூர் விமான நிலையத்தில் 90 மீட்டர் வரை தான் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையின் இருபக்கமும் போதுமான இடம் இல்லை. 100 மீட்டருக்கு பதிலாக 75 மீட்டராக உள்ளது.

மேலும் மழைக் காலங்களில் டேபிள் டாப் ஓடு பாதயைில் விமானம் இறங்குவதற்கு போதுமான வழகாட்டு நெறிமுறைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து