பேச்சுவார்த்தையில் பங்கேற்க டெல்லி வந்து சேர்ந்த அமெரிக்க அமைச்சர்கள்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      இந்தியா
US 2020 10 26

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் நேற்று வந்து சேர்ந்தனர்.

இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடி பேச்சுவார்த்தை (2+2 பேச்சுவார்த்தை) நடந்து வருகிறது.

அவ்வகையில் மூன்றாவது பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.  இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் நேற்று இந்தியா வந்து சேர்ந்தனர். 

நேற்று முன்தினம் நள்ளிரவில் அமெரிக்காவில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் டெல்லி வந்து சேர்ந்தனர். மைக் பாம்பியோவுடன் அவரது மனைவி சூசன் பாம்பியோவும் வந்துள்ளார். அவர்களை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.  

முன்னதாக தனது பயணம் பற்றி டுவிட்டரில் பதிவிட்ட பாம்பியோ, இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார். 

டெல்லியில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் மைக் பாம்பியோ, மார்க் எஸ்பர் ஆகியோருடன் இந்தியாவின் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த சந்திப்பின்போது பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசப்படுகிறது. 

 இந்த பேச்சுவார்த்தையின் போது பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தகவல் பகிர்வு, ராணுவ தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு வர்த்தகம் ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சராக பாம்பியோ நான்காவது முறையாக இந்தியாவிற்கு வந்துள்ளார். அவரது இந்த சுற்றுப் பயணத்தின்போது இந்த பேச்சுவார்த்தை தவிர பிரதமர் மோடியையும் சந்தித்து பேச உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து