முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வரும் 23 மற்றும் 24-ம் தேதிகளில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.  இன்று 21 மற்றும் நாளை 22 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழையும், ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். 

வரும் 23-ம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.  24-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை , சிவகங்கை , ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.  கடந்த 24 மணி நேரத்தில் வைப்பாறு (தூத்துக்குடி) 10 செ.மீ., எட்டயபுரம் (தூத்துக்குடி), திருபுவனம் (சிவகங்கை), சிவகாசி (விருதுநகர்), மதுரை (மதுரை) தலா 4 செ.மீ., சூரன்குடி (தூத்துக்குடி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), புளிப்பாட்டி (மதுரை) தலா 3 செ.மீ., போடிநாய்க்கனுர் (தேனி) , கிராண்ட் அணை (தஞ்சாவூர்) , சிட்டாம்பட்டி (மதுரை) தலா 2 செ.மீ. ஆகிய இடங்களில் அதிகபட்சமாக மழை பெய்துள்ளது. 

அரபிக்கடல் பகுதிகளில் 23-ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  24-ம் தேதி வரை மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  23-ம் தேதி தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

24-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  25-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து