சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் உடனடியாக விடுவிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2020      தமிழகம்
Thoothukudi 2020 0

Source: provided

சென்னை : மினிகாய் தீவு கடலோரக் காவல் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், தருவைக்குளம் மீன்பிடி இறங்குதளத்தை தங்குதளமாகக் கொண்ட மரிய குணசேகரன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகு மூலம் தருவைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 10 மீனவர்களுடன் 18.11.2020 அன்று மினிகாய் தீவு கடற்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த பொழுது, மினிகாய் தீவு கடலோரக் காவல் படையினரால் 10 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தரவேண்டுமென அவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட கலெக்டர் ஆகியோர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், சிறைபிடிக்கப்பட்ட 10 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து