இந்திய வீரர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர கிரிக்கெட் ஆஸ்திரேலியா சம்மதம்

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      விளையாட்டு
Australia 2021 01 13

Source: provided

சிட்னி  பிரிஸ்பேனில் இந்திய அணி வீரர்கள் தங்கியுள்ள விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து பிரிஸ்பேனில் இந்திய அணி வீரர்கள் தங்கியுள்ள விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து இந்திய வீரர்கள் புகார்கள் அளித்த நிலையில் பி.சி.சி.ஐ. தலையிட்டு சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. 

இந்நிலையில் பிரிஸ்பேனில் இந்திய அணி வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து இந்திய வீரர்கள் புகார்கள் அளித்துள்ளார்கள். பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

அங்கு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாதது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. விடுதி அறையில் வீரர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துதரக்கூடிய உதவியாளர்களும் கழிப்பறையைச் சுத்தம் செய்யவும் பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை,

உணவு தேவையென்றால் கூட செயலி வழியாகவே கேட்க வேண்டிய நிலைமை, உடற்பயிற்சி நிலையம்  நீச்சல் குளத்தில் அனுமதி இல்லை என வரிசையாகக் குறைகளை அடுக்கியுள்ளார்கள் இந்திய வீரர்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாதரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.ஏற்கெனவே பிரிஸ்பேனில் விளையாடுவதற்கு இந்திய அணி முதலில் தயங்கியது.

சிட்னியின் கடற்கரைப் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்ததால், அந்நகரம் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்துடனான எல்லையை குயின்ஸ்லாந்து மாகாணம் மூடியுள்ளது. குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில் தான் 4ஆவது டெஸ்ட் நடைபெறுகிறது.

குயின்ஸ்லாந்து மாகாணம் விதிக்கும் கரோனா தடுப்பு விதிமுறைகள் மிகக் கடுமையானதாக உள்ளன. விளையாடும் மற்றும் பயிற்சியில் ஈடுபடும் நேரங்கள் தவிர கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அறையை விட்டு வெளியேற முடியாதபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு இந்திய வீரர்களும் பிசிசிஐயும் முதலில் எதிர்ப்பு தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஏற்கெனவே ஆஸ்திரேலியா வந்தவுடனேயே பல நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், தற்போது மீண்டும் மிகக் கடுமையான பாதுகாப்பு விதிகளுக்கு உட்படுத்தப்படுவது இந்திய வீரா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் 4வது டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெறுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. எனினும் 4வது டெஸ்டை பிரிஸ்பேனில் நடத்துவதற்கு பி.சி.சி.ஐ. சம்மதம் தெரிவித்தது.

இந்நிலையில் பிரிஸ்பேன் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து இந்திய அணியினர் புகார்கள் தெரிவித்ததால் வேறுவழியின்றி பி.சி.சி.ஐ. தலையிட வேண்டியதாயிற்று. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் இதுபற்றி பி.சி.சி.ஐ. முறையிட்டது. இதையடுத்து இந்திய வீரர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது.

இதன்படி உடற்பயிற்சி நிலையம், நீச்சல் குளம் போன்றவற்றைப் பயன்படுத்த இந்திய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் விடுதி அறை மற்றும் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் உதவியாளர்கள் இன்னும் முழுமையாக நியமிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

வியாழன் காலையில் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காணப்படும் என பி.சி.சி.ஐ. தரப்பில் கூறப்பட்டுள்ளதால் இந்திய வீரர்கள் பயிற்சியிலும் டெஸ்ட் ஆட்டத்துக்கான திட்டங்களிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து