புதுடெல்லி : பிரதமர் மோடி ஸ்டார்ட் அப் சர்வதேச மாநாட்டில் இன்று (ஜன.,16) உரையாற்றுகிறார்.
வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடுபடுபவை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்றழைக்கப்படுகின்றன. அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் இந்த வகையைச் சேர்ந்தவையே. இந்தியாவில் பிரதமர் மோடி 2016 ஜனவரி மாதம் 16-ம் தேதி ஸ்டார்ட் அப் இந்தியா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் உள்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்குவதை ஊக்குவிக்க ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இத்திட்டத்தின் ஐந்தாவது சர்வதேச மாநாடு நேற்று டெல்லியில் துவங்கியது. ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச மாநாடு எனப்படும் இந்த மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் தொழிலதிபர்கள், வல்லுனர்கள், ஆய்வாளர்கள் உரையாற்றினர். இம்மாநாட்டில் இன்று பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றுகிறார்.
அவர் ஸ்டார்ட் அப் நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.