துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      தமிழகம்
Duraimurukan 2021 01 16

Source: provided

வேலூர் : தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் மூச்சுத் திணறல் காரணமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். காட்பாடி காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.  

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் துரைமுருகன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியால் அவர் சோர்வடைந்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில், காட்பாடி காந்தி நகரில் வீட்டில் இருந்த துரைமுருகனுக்கு நேற்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் இருதய சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருதய சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து