புதுடெல்லி : பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது. ஆண்டு தோறும் இந்த தினத்தில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அவரது பிறந்த நாளை அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு எனது புகழ் வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் எம்.ஜி.ஆர் திரையுலகிலும், அரசியலிலும் பரவலாக மதிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவர் முதலமைச்சராக இருந்த போது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்த நாளில் எம்.ஜி.ஆருக்கு எனது புகழ் வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.