மெரினாவில் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு ஊர் திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அ.தி.மு.க. சார்பில் வழங்கப்படும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,
27.01.2021 அன்று நடைபெற்ற சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அம்மாவின் நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் வடக்கு ஒன்றியம் சிறுகுடி ஊராட்சி இந்திரா நகர் கிளை கழகத்தை சேர்ந்த கே. மூக்கன் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் வேங்கை குறிச்சி ஊராட்சி மாராச்சிரெட்டி பட்டி கிளைக் கழக அவை தலைவர் ஏ. மாரியப்பன் ஆகியோர் அம்மாவின் நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பும் போது விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டும், ஆற்றொணா துயரமும் மிகுந்த வேதனையையும் அடைந்தோம். அன்பு சகோதரர்கள் மூக்கன், மாரியப்பன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். மறைந்த மூக்கன், மாரியப்பன் ஆகியோரது குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.