குறுகிய தூர ரயில்களின் பயணிகள் கட்டணம் உயர்வு : இந்திய ரயில்வே அறிவிப்பு

வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2021      இந்தியா
train-1-2021-02-25

ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக குறுகிய தூர ரயில்களின் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, இந்திய ரயில்வே கடந்தாண்டு மார்ச் 22-ம் தேதி முதல் ரயில்களின் இயக்கத்தை நிறுத்தியது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் படிப்படியாக நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மொத்தம் 1,250 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ், 5,350 புறநகர் ரயில் சேவைகள், 326-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இந்திய ரயில்வே பயணிகளின் ரயில் கட்டணத்தை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறுகிய தூர ரயில்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது குறுகிய தூர பயணிகள் ரயில்களின் எண்ணிக்கையில் 3 சதவீதத்திற்கும் குறைவான ரயில்களுக்கு மட்டுமே இந்த கட்டண உயர்வு இருக்கும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் அபாயத்தை கருத்தில் கொண்டும், அதிகளவில் மக்கள் ரயில் பயணங்களை தவிர்க்கவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணங்களின் உயர்வு 30 முதல் 40 கி.மீ வரை பயணிக்கும் பயணிகளுக்கு பொருந்தும். மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறுகிய தூர பயணத்திற்கும் மட்டும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து